இந்தியா

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: கனிமொழி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மத்திய அரசின் பொது பட்ஜெட் மீதான விவாதத்தின்போது திமுக எம்.பி. கனிமொழி பேசியது:

தூத்துக்குடி துறைமுகத் திட்டத்துக்காக ரூ.11,600 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதை வரவேற்கிறோம். இது தென் இந்தியாவின் கடல்வழி பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் முயற்சிக்கப்பட்ட, சேது சமுத்திரத்தின் திட்டத்தையும் மத்திய அரசு மீண்டும் தொடங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இதில், ரூ. 767 கோடி இதுவரை செலவிடப்பட்டுள்ளது.

குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது விண்வெளி ஏவுதளம் அமைக்க திமுகவும் ஆதரவளிக்கிறது. சென்னையில் மெட்ரோ ரயிலுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.74 கோடி போதாது. இதன் இரண்டாவது கட்டுமானப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

1974-ல் கச்சத்தீவு எந்த எதிர்ப்பும் இன்றி அளிக்கப்பட்டதாக நேற்று அவையில் கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுக்கிறேன். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி டெல்லிக்கு வந்து சந்தித்தார். தமிழக மீனவர்களின் உரிமைகளை காக்கும் வகையில் மத்திய அரசை கண்டித்து சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என கனிமொழி பேசினார்.

SCROLL FOR NEXT