புதுடெல்லி: பஞ்சாபில் பொதுமக்களின் இல்லத்துக்கே சென்று 43 அரசு சேவைகளை வழங்கும் திட்டத்தை மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது.
பஞ்சாபில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், 2024 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை ஆம் ஆத்மி கட்சி தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக, முதல்வர் பகவந்த் மானும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் இல்லம் தேடிச் சென்று 43 அரசு சேவைகளை வழங்கும் திட்டத்தை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த திட்டத்தின்படி பஞ்சாப் மாநில அரசு சேவைகளைப் பெற அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டியிருக்காது. பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே, 1076 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு பதிவு சான்றிதழ் உள்ளிட்ட சேவைகளைப் பெற முடியும்.
இது பொதுமக்களின் வாழ்வியல் நடைமுறையை எளிமையாக்குவதுடன் போக்குவரத்து செலவு குறைந்து மாநில அரசுக்கு ரூ.200 கோடிக்கு மேல் மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து முதல்வர் பகவந்த் மான் கூறும்போது, “ஆம் ஆத்மி அரசு இன்று புதிய வரலாறு படைத்துள்ளது” என்றார்.
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறும்போது, “அரசு சேவைகளை இல்லத்துக்கே சென்று வழங்கும் திட்டத்தை டெல்லியில் கடந்த 5 ஆண்டுக்கு முன்பே தொடங்கி விட்டோம். பஞ்சாப் மாநிலத்திலும் இந்த திட்டம் பல ஆண்டுக்கு முன்பே தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் இங்கு முன்பு ஆட்சி செய்தவர்கள் மெத்தனமாக இருந்துவிட்டார்கள்” என்றார்.