ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் மனைவியும் பிஹார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, டெல்லியில் அரசு குடியிருப்பு பெறுவதற்காக தனது கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.
மாநிலங்களவையில் காலியாகவுள்ள 58 உறுப்பினர் பதவிகளுக்கு அடுத்த 3 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பிஹாரில் இருந்து 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தற்போது இந்த 6 பதவிகளில் 4 ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) வசமும் 2 அதன் கூட்டணிக் கட்சியான பாஜக வசமும் உள்ளது. இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் எந்தக் கட்சிக்கு இந்தப் பதவிகள் செல்லும் என கணக்கிடப்பட்டு வருகிறது. அதன்படி ஆர்ஜேடி, ஜேடியு ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களிலும் பாஜக 1 இடத்திலும் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. மற்றொரு இடத்தில் லாலு ஆதரவுடன் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டு லாலுவின் கட்சிக்கு 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைத்தது. அவற்றில் ஒன்றை தனது மகள் மிசா பாரதிக்கும் மற்றொன்றை தனது வழக்குகளில் வாதிட்ட ராம்ஜெத்மலானிக்கும் லாலு ஒதுக்கினார். அப்போது முடிந்த பிஹார் தேர்தலில் லாலு தனது மகன் தேஜஸ்வியை துணை முதல்வராக்கினார். இதில் அதிருப்தி அடைந்த மிசா பாரதியை சமாளிக்க அவருக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டது. இல்லையெனில் அப்போதே மிசாவுக்கு பதிலாக ராப்ரி அனுப்பப்பட்டிருப்பார். எனவே இந்தமுறை 2 பதவிகளில் ஒன்றை லாலு தனது மனைவிக்கு ஒதுக்க உள்ளார்.
இது குறித்து ஆர்ஜேடி நிர்வாகிகள் வட்டாரத்தில் ‘தி இந்து’விடம் கூறும்போது, “கால்நடை தீவன வழக்குகளில் இரண்டில் லாலு தண்டிக்கப்பட்டுள்ளார். மிசாபாரதி மீது அமலாக்கத் துறை சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அவரது மகன் தேஜஸ்வி மீதும் வழக்குகள் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றை உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதிட லாலுவின் குடும்பத்தினர் அவ்வப்போது டெல்லி வருவது அவசியமாகிறது. இதற்காக டெல்லியின் மையப் பகுதியில் வீடு கிடைத்தால் வசதியாக இருக்கும் என லாலு நினைக்கிறார். இந்நிலையில் ராப்ரி, மாநிலங்களவை உறுப்பினரானால் அவருக்கு டெல்லியில் அரசு குடியிருப்பு ஒதுக்கப்படும். இது லாலு உட்பட அனைவரும் தங்குவதற்கு வசதியாக இருக்கும் என்பதால் ராப்ரி மாநிலங்களவை உறுப்பினராவது உறுதி” என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், மற்றொரு பதவியை ஜேடியு-வில் இருந்து நிதிஷ்குமாரால் நீக்கப்பட்ட அக்கட்சியின் முன்னாள் தலைவர் சரத்யாதவ் பெற முயன்று வருகிறார். இதற்காக ஜனவரி 1-ல் ராப்ரியை அவரது வீட்டில் சந்தித்த சரத்யாதவ் முழு ஆதரவு இருப்பதாக தெரிவித்தார். மறுநாள் சிறையில் லாலுவை சந்திக்க விரும்பியவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. எனவே, லாலு தன்னை மாநிலங்களவைக்கு அனுப்புவார் என சரத்யாதவ் உறுதியாக நம்புகிறார்.
இதற்கிடையே சரத்யாதவ் ஜேடியு-வில் நீக்கப்பட்டதை தொடர்ந்து அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஒருவேளை, ஆர்ஜேடி சார்பில் சரத்யாதவ் மீண்டும் எம்.பி.யானால் அவர் வழக்கை வாபஸ் பெறுவார் என தெரிகிறது. பிறகு இதற்காக நடைபெறும் இடைத்தேர்தலில் அப்பதவி மீண்டும் ஜேடியு வசம் சென்று விடும்.