இந்தியாவின் 69-வது குடியரசு தினம், ட்விட்டரில் புதிய சாதனை படைத்துள்ளது. அன்றைய தினம் மட்டும் 11 லட்சம் பேர் குடியரசு தினம் குறித்து ட்விட் செய்துள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்காவில் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ட்விட்டர் சமூக வலைதளத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
இந்திய குடியரசு தினக் கொண்டாட்டம் இந்த ஆண்டு புதிய சாதனையைப் படைத்துள்ளது. அன்றைய தினம் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குடியரசு தினம் குறித்து ட்விட்டரில் வாழ்த்து மற்றும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
உலகம் முழுவதும் அன்று குடியரசு தின கொண்டாட்டம்தான் டிரண்டாகி முதலிடத்தில் இருந்தது. கடந்த ஆண்டு குடியரசு தினக் கொண்டாட்டத்தின் போது 9 லட்சம் பேர் ட்விட் செய்தனர். இந்த ஆண்டு அதை விட அதிகமானோர் ட்விட் செய்துள்ளனர்.
அவற்றில் இந்திய மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இந்தியில் வெளியிட்ட குடியரசு தின வாழ்த்து, அதிகம் விரும்பப்பட்டு முதலிடம் பிடித்தது.
அதற்கு அடுத்து ஆசியான் மாநாடு மற்றும் குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த தென் கிழக்கு ஆசியாவின் 10 நாட்டு தலைவர்களை வரவேற்று மோடி வெளியிட்ட செய்தி இடம்பெற்றது.
அத்துடன் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட கடிதமும் மிகவும் பிரபலானது.
அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அனைத்துத் துறைகளை சார்ந்த பிரபலங்கள் ட்விட்டரில் வெளியிட்ட குடியரசு தின வாழ்த்து அன்றைய தினம் உலகளவில் டிரண்டானது.
இவ்வாறு ட்விட்டர் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.