ஹைதராபாத்: ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தனியாக தெலங்கானா மாநிலம் பிரிந்த பின்னரும், கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு பிரச்சினை இன்னமும் ஓயாமல் உள்ளது.இதற்காக கிருஷ்ணா நதி நீர் வாரியமும் ஏற்பாடு செய்யப்பட்டது. நாகார்ஜுன சாகர் அணையின் வலது புறத்தில் இருந்து ஆந்திராவுக்கு 50 டிஎம்சி நீர் திறந்து விட வேண்டி இருந்தது. ஆனால், தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல்நடைபெற்றதால் இதனை அவர்கள்கண்டுகொள்ளவில்லை.
பலமுறை ஆந்திர அரசு, தெலங்கானா அரசுக்கு தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்காததால்,ஆந்திர நீர்வளத்துறை அமைச்சர் அம்பாத்தி ராம்பாபு கடந்த வியாழக்கிழமை சமூக வலைதளம் மூலம், தாங்கள் சாகர் அணைக்கு வந்து அணையில் இருந்து ஆந்திராவுக்கு வர வேண்டிய தண்ணீரை திறந்து விடப் போகிறோம் என குறிப்பிட்டிருந்தார்.அதன்படி, போலீஸார் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள், ஆந்திர எல்லைக்குள் உள்ளநாகார்ஜுன சாகரின் 13 மதகுகள் உள்ள பகுதிகளில் குறுக்கே வேலி அமைத்தனர்.
மேலும், வலது கால்வாயின் மதகுகளையும் இரவோடுஇரவாக திறந்து விட்டனர். இதனைஅறிந்த தெலங்கானா அரசு,கிருஷ்ணா நதிநீர் வாரியத்திடம்புகார் தெரிவித்தது. ஆந்திர போலீஸார் அத்துமீறி சாகர் அணையில் நுழைந்து, கிருஷ்ணா நீரை திறந்து விட்டுள்ளனர் என்று அந்த புகாரில் தெலங்கானா அரசு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இது குறித்து நல்கொண்டா போலீஸார் ஆந்திர போலீஸார் மீது வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால், ஆந்திர போலீஸார் மீதுதெலங்கானா போலீஸார் தாக்குதல் நடத்தியதாக, ஆந்திர போலீஸாரும் விஜயபுரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் மத்திய அரசின் பார்வைக்கு சென்றது. இதனை தொடர்ந்து, பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கும் வரை யாரும், நாகார்ஜுன சாகர் அணைக்கு செல்லக்கூடாது. தண்ணீர் உபயோகிக்க கூடாது என மத்திய ஜலசக்தி துறை இரு மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது. இதனை இரு மாநில அரசுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணி முதல் நாகார்ஜுன சாகர் அணைமுற்றிலுமாக மத்திய ரிசர்வ் படை போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இந்நிலையில், நேற்று இருமாநில முதன்மை செயலாளர்களுடன் டெல்லியில் இருந்து ஜலசக்தி துறை செயலாளர் காணொலி மூலம்ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு தெலங்கானா முதன்மை செயலாளர் வரவில்லை. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் இந்த ஆலோசனை கூட்டத்தை தள்ளி வைக்க கேட்டுக்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து வரும்டிசம்பர் 6-ம் தேதிக்கு இக்கூட்டம்தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதுவரை எந்த மாநிலமும் நாகார்ஜுன சாகரில் இருந்து கிருஷ்ணநீரை உபயோகிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.