இந்தியா

ரூ.13 கோடி மோசடி புகார்: மார்க்சிஸ்ட் செயலாளர் மகனிடம் விசாரணை நடத்த பாஜக மனு

செய்திப்பிரிவு

கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரி ஆட்சி உள்ளது. மார்க்சிஸ்ட் மாநில செயலாளராக இருப்பவர் கொடியேறி பாலகிருஷ்ணன். இவரது மூத்த மகன் பினய்.

இவர் ரூ.13 கோடியை மோசடி செய்ததாக துபாயில் இருந்து செயல்படும் ஜாஸ் சுற்றுலா நிறுவனம் புகார் கூறியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் காங்கிரசும் பாஜகவும் கோரி வருகின்றன.

கேரள பாஜக பொதுச் செயலாளர் ஏ.என்.ராதாகிருஷ்ணன், கொச்சியில் உள்ள அமலாக்கத் துறை அதிகாரியை சந்தித்து துபாய் நிறுவனத்தின் புகார் குறித்து, கொடியேறி பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் பினய் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று மனு அளித்தார்.

பின்னர், ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

கொடியேறி பாலகிருஷ்ணனும் அவரது மகன்களும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனர். இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். ஹவாலா மூலம் இந்தியாவுக்கு பணம் கடத்தப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரிக்க வேண்டும். கோடியேறி பாலகிருஷ்ணனின் அரசியல் செல்வாக்கு காரணமாக அவரது மகன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜன ஜக்ரதா யாத்ரா என்ற பெயரில் கோடியேறி பாலகிருஷ்ணன் சென்ற யாத்திரையில் கோழிக்கோடு சென்றபோது அவர் பயன்படுத்திய வாகனம், தங்க கடத்தலில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு சொந்தமானது. இதிலிருந்து தங்க கடத்தல் ஊழலில் கோடியேறி பாலகிருஷ்ணனுக்கும் தொடர்பு இருப்பது அம்பலமாகி உள்ளது.

இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

SCROLL FOR NEXT