புதுடெல்லி: உத்தராகண்ட் சில்க்யாரா சுரங்கப் பணி மீண்டும் தொடங்கப்படும் என்று சாலை போக்குவரத்துத் துறையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா என்ற இடத்தில் இருந்து பர்கோட் வரை 4.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதில் ஏற்பட்ட திடீர் மண் சரிவு காரணமாக சுரங்கப்பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். 17 நாட்களுக்குப் பிறகு அவர்கள் நேற்று இரவு பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெறுமா என்ற கேள்விக்குறி எழுந்தது.
இந்நிலையில், இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சாலைப் போக்குவரத்துத் துறை உயரதிகாரி ஒருவர், "உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இத்திட்டம் மீண்டும் தொடங்கப்படும். முதலில், பாதுகாப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படும். அதேநேரத்தில், தற்போது சுரங்கப் பாதையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்யும் பணியும் மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கும் லடாக் பகுதிக்கும் இடையே நடைபெற்ற ஜோசிலா சுரங்கப்பாதை திட்டத்தின் தலைவரான ஹர்பால் சிங் கூறுகையில், "புவியியல் ஆய்வில் ஏற்பட்ட தவறு, பூமிப் பகுதியின் ஆதார நிலை, கட்டுமானத்தின்போதான தவறுகள், தகவல் பராமரிப்பில் ஏற்பட்ட தவறுகள் போன்றவை இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம். நெடுஞ்சாலைகளிலும், ரயில்வே திட்டங்களிலும் சுரங்கம் தோண்டும்போது, பாதுகாப்புக்கான சுரங்கப் பாதையும் ஏற்படுத்தப்படும்" என கூறியுள்ளார்.