நவநீதம்மாவுக்கு திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி எம். ரவிசந்திரா பிரசாதங்களை வழங்கி ஆசி பெற்றார்.

 
இந்தியா

திருப்பதியில் 3,500 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசித்த 116 வயது மூதாட்டி!

என்.மகேஷ்குமார்

திருமலை: தனது 116 வயதிலும் திருப்பதி ஏழுமலையான் மீது கொண்ட அதீத பக்தி காரணமாக அலிபிரி மலைப்பாதை வழியாக 3,500 படிகள் ஏறி திருமலை சென்று, சுவாமியை இன்று தரிசனம் செய்துள்ளார் நவநீதம்மாள். முதல்வரின் உத்தரவின்பேரில், திருப்பதி தேவஸ்தானம் அந்த மூதாட்டிக்கு விஐபி தரிசனம் ஏற்பாடு செய்து கவுரவித்தது.

சென்னையை சேர்ந்தவர் நவநீதம்மாள் (116). திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தரான இவர் தன்னை ஏழுமலையானை தரிசிக்க அழைத்து செல்லுமாறு தனது பேரன் திக்பதியிடம் கேட்டுக்கொண்டார். மேலும், திருப்பதி அலிபிரி மலைப்பாதை வழியாக நடந்தே சென்று நேர்த்தி கடன் செலுத்தி தான் ஏழுமலையானை தரிசிப்பேன் எனவும் அவர் பிடிவாதமாக கூறிவிட்டார்.

அவரின் பேச்சை தட்டமுடியாமல், நவநீதம்மாவின் பெண் வயிற்று பேரன் திக்பதி மற்றும் அவரது குடும்பத்தார் திருப்பதிக்கு புறப்பட்டு வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அவர்கள் அலிபிரி மலைப்பாதை வழியாக பாட்டி நவநீதம்மாவுடன் மெல்ல நடக்க ஆரம்பித்தனர். அந்த தள்ளாத வயதிலும் ஏழுமலையானை தரிசனம் செய்து விட வேண்டும் எனும் ஆர்வம் அந்த மூதாட்டியின் கண்களில் தெரிந்தது. அவர் கைத்தாங்கலாக நடந்து செல்வது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

இதனை பார்த்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது வலைதளத்தில், “பக்திக்கு வயது ஒரு தடைக்கல்லே அல்ல. ஏழுமலையான் மீது 116 வயது பக்தை கொண்டுள்ள நம்பிக்கையே இதற்கு சான்று” என குறிப்பிட்டிருந்தார். பலர் அந்த மூதாட்டியை பாராட்டி இருந்தனர். மேலும், மூதாட்டிக்கு சிறப்பான தரிசன ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென சந்திரபாபு நாயுடு தேவஸ்தான உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடுவும் தனது சமூக வலைத்தளம் மூலம் அந்த மூதாட்டியை தேடி கண்டுபிடித்து அழைத்து வந்து விஐபி பிரேக் தரிசனம் செய்து தர வேண்டுமென்றும், அவரது வாழ்நாள் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் அவர் பயோ மெட்ரிக் வழியாக (பணியில் உள்ள தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள், அர்ச்சகர்கள் செல்லும் வழி) செல்லலாம் எனவும் அனுமதி வழங்கினார்.

இதனை தொடர்ந்து தேவஸ்தான ஊழியர்கள் திருமலையில் 116 வயது மூதாட்டியை தேடி கண்டு பிடித்தனர். அதன் பின்னர், இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் வாயிலாக அவரையும், அவருடன் வந்த அவரது குடும்பத்தார் அனைவரையும் அதே விஐபி பிரேக் தரிசனம் வழியாக தரிசனத்திற்கு அழைத்து சென்றனர். அதன் பின்னர், கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில், மூதாட்டி நவநீதம்மாவிற்கு, தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேதங்கள் ஓதி, பட்டு வஸ்திரத்தை போர்த்தி, வேத ஆசீர்வாதம் செய்தனர்.

தேவஸ்தான நிர்வாக அதிகாரி எம்.ரவிசந்திரா, மூதாட்டிக்கு தீர்த்த, பிரசாதங்கள், சுவாமியின் திருவுருவப்படம் மற்றும் லட்டு, வடை பிரசாதங்களை வழங்கி, அவரின் காலை தொட்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தார். அவரை பத்திரமாக தேவஸ்தான ஊழியர்கள் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக மூதாட்டியின் பேரன் திக்பதி பேசுகையில், “பாட்டிக்கு ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் எனும் தீவிர ஆர்வம் இருந்தது. அதுவும் நடந்தே மலையேறி சென்று தரிசிக்க வேண்டும் என கறாராக சொல்லி விட்டார். நாங்கள் மெல்ல அவரை அலிபிரி மலைப்பாதை வழியாக நடத்தி அழைத்து சென்றோம். யாரோ புண்ணியவான் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.

அதன் பிறகு, எங்கள் பாட்டியை பலர் பாராட்டி வந்தனர். இதற்குள் இது வைரல் ஆகி, அது முதல்வர் சந்திரபாபு நாயுடு வரை எட்டி, அவர் வாயிலாக திருப்பதி தேவஸ்தானத்தினர் எங்களை தேடி கண்டு பிடித்து மிக அருமையான தரிசன ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். எங்கள் வாழ்நாளில் இதனை மறக்க மாட்டோம். உதவி செய்த அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என மனம் கலங்கி நன்றி சொன்னார்.

SCROLL FOR NEXT