புதுடெல்லி: ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் ஒரேகட்டமாக நேற்று நடைபெற்றது. முன்னதாக தேர்தல்பிரச்சாரம் கடந்த 23-ம்தேதி ஓய்வடைந்தது.
இந்நிலையில் கடைசி பிரச்சாரநாளில் பாஜகவுக்காக வெளிநாட்டுப் பெண்கள் வாக்கு சேகரிக்கும்காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. இந்த காட்சிப்பதிவு, சரியாக வாக்குப்பதிவு நாளில் ராஜஸ்தானில் வைரலானது. இந்தக் காட்சிப் பதிவு, சவாய் மாதேபுர் தொகுதி பாஜக வேட்பாளர் கிரோரிலால் மீனாவின் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டிருந்தது. இவர் பாஜக எம்.பி.யாகவும் உள்ளார். இந்த காட்சிப்பதிவை மேலும் பல பாஜக வேட்பாளர்கள் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி இருந்தனர். இதை ராஜஸ்தானில் பலரும் பார்த்து ரசித்ததுடன் தங்கள் கருத்துகளையும் பதிவேற்றம் செய்திருந்தனர்.
இந்த காட்சிப்பதிவில், மூன்று வெளிநாட்டு பெண்கள், தங்கள் கையில் பாஜக கொடியுடன் ஆடிப்பாடி அக்கட்சிக்காக வாக்கு சேகரிக்கின்றனர். ராஜஸ்தானிய உடை அணிந்திருந்த அந்தப் பெண்கள், ராஜஸ்தானிய மொழியில் பாடியிருந்தனர். மேலும் இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அப்பெண்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்த மூன்று பெண்களும் ரஷ்ய நாட்டை சேர்ந்தவர்கள் என கருத்து பதிவாகி இருந்தது. இந்த காட்சிப்பதிவு சற்று வித்தியாசமாக இருந்ததால், அனைவரும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ல் வெளியாக உள்ளது.