மகாராஷ்டிராவின் கஞ்சர்பட் என்ற சாதிப்பிரிவை சேர்ந்த பெரியோர்களிடத்தில் மணப்பெண் கன்னிமையுடன் உள்ளவர்தானா என்பதைப் பரிசோதிக்கும் பழக்க வழக்கம் இருந்து வருவதை இளைஞர்கள் மூவர் கடுமையாக எதிர்த்தனர், இதில் ஆத்திரமடைந்த இந்தச் சாதிப்பிரிவைச் சேர்ந்த 40 பேர் இந்த 3 இளைஞர்களையும் கடும் ஆயுதங்களால் தாக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புனேயின் பிம்ப்ரிசின்ச்வத் என்ற இடத்தில் ஞாயிறு இரவு பஞ்சாயத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து தாக்கிய இந்தச் சாதிப்பிரிவைச் சேர்ந்த 40 பேர் மீது போலீசார் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து பிரசாந்த் இந்த்ரேக்கர் (35) என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஞாயிறு இரவு 11.30 மணியளவில் நடந்த சம்பவத்தை போலீஸார் விவரிக்கும் போது, “சாதித்திருமண நிகழ்வு தொடர்பாக கஞ்சர்பட் பிரிவைச் சேர்ந்தவர்கள் சாதிப் பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளனர். அதில் மணப்பெண்ணின் கன்னிமை குறித்து சோதனை நடத்த சாதிப்பெரியவர்கள் பரிந்துரை செய்தனர். இதனை எதிர்த்து சிலகாலமாக 3 இளைஞர்கள் சமூகவலைத்தளங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். ஞாயிறன்றும் இந்த்ரேக்கர் மற்றும் 2 பேர் பஞ்சாயத்தில் இருந்தனர்.
அப்போது 40 பேர் கொண்ட கும்பல் இவர்களைக் கைகளாலும் ஆயுதங்களாலும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்” என்றார்.
கஞ்சர்பட் பிரிவினர் பொதுவாக திருமணம் முடிந்த பிறகு விடுதிக்கு முதலிரவைக் கொண்டாடத் தம்பதியர் செல்லும் போது மணப்பெண்ணிடம் வெள்ளை படுக்கை விரிப்பை அளிப்பார்கள். முதலிரவு முடிந்த வெள்ளை படுக்கை விரிப்பில் ரத்தக்கறை இருந்தால் அவர் கன்னிமை சோதனையில் தேறி விட்டதாக அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அப்படி ரத்தக்கறை இல்லையெனில் அவருக்கு கடந்த காலத்தில் வேறு ஒரு பாலுறவு இருந்துள்ளது என்று அபாண்டமாக குற்றம்சாட்டி விடுவார்கள்.
இந்த அநாகரிகமான செயல்களைக் கண்டித்துதான் இந்த்ரேக்கர் உள்ளிட்டோர் வாட்ஸ் ஆப்பில் குழு தொடங்கி இந்தப் பிற்போக்கு நடத்தையைக் கண்டித்து வந்தனர். போலீஸார் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று இந்த இளைஞர்கள் கடுமையாகச் சாடிவந்தனர்.