புதுடெல்லி: உத்தரபிரதேசத்தை போன்று பிஹாரிலும் ஹலால் முறைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார்.
முஸ்லிம் மார்க்க சட்ட விதிகளின்படி, உணவு முறையில் ‘ஹலால்' என்பது அனுமதிக்கப்பட்டதாகவும் ‘ஹராம்' என்பது தடை செய்யப்பட்டதாகவும் பின்பற்றப்படுகிறது. ஹலால் தரச்சான்றிதழ்களை உ.பி.யில் பல நிறுவனங்களும் அமைப்புகளும் அளித்து வருகின்றன. இச்சூழலில் உ.பி.யில் ஹலால் தரச்சான்றிதழ் அளிக்கும் முறைக்கு யோகி ஆதித்யநாத் அரசு கடந்த சில தினங்களுக்கு முன் தடை விதித்தது. இதை எதிர்த்து முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான ஜமாத்-எ-உலாமா ஹிந்த் (மதானி பிரிவு) நீதிமன்றம் செல்ல முடிவு எடுத்துள்ளது.
இந்நிலையில் உ.பி.யை போன்று பிஹாரிலும் ஹலால் முறைக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சருமான கிரிராஜ்சிங் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்த ஹலால் முறை சான்றிதழ்களுக்கு இஸ்லாமிய மார்க்க சட்டங்களுடன் எந்த தொடர்பும் இல்லை. தனது சம்மந்தப்பட்ட இதர மதங்களை இஸ்லாமிய முறைக்கு இழுக்கும் முயற்சி இது. இதற்காக பல நிறுவனங்கள் தாங்களாகவே பொதுமக்களுக்கு உத்தரவிடவும் முயற்சிக்கின்றன. இது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது.
எனவே உ.பி. அரசு போன்று பிஹார் அரசும் உறுதியான முடிவைஎடுக்க வேண்டும். மதச்சார்பற்ற நமது ஜனநாயக நாட்டில் இந்தஹலால் சான்றிதழ் அளிப்பதில் இரண்டு டிரில்லியன் டாலர் அளவில் லாபம் பார்க்கப்படுகிறது. இந்ததொகை தீவிரவாத நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. இவற்றை தடை செய்து ஹலால் முறை மீது ஆழமான விசாரணை நடத்தப்படுவது அவசியம்.
இதன்மூலம், நம் நாட்டில் மறைமுகமான வகையில் ஜிகாத் அமலாக்கப்படுகிறது. இதுபோன்ற செயல்கள் மீது பிஹாரை போன்ற பெரிய மாநிலங்கள் நடவடிக்கை எடுப்பது அவசியம். இவ்வாறு அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.
ஹலால் சான்றிதழ் இறைச்சிக்கு மட்டுமின்றி, சமையல் எண்ணெய், பேக்கரி வகைகள், மருந்துஉள்ளிட்ட பலவற்றுக்கும் அளிக்கப்படுகிறது. முஸ்லிம்களுக்கு மட்டுமான இந்த சான்றிதழ் முறை சர்வதேச நாடுகளின் ஏற்றுமதியிலும் பயன்படுத்தப்படுகிறது. பிஹாரில் பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரான கிரிராஜ் சிங், இம்மாநிலத்தின் பேகுசராய் தொகுதி எம்.பி.யும் ஆவார். இவர் முஸ்லிம்களை கடுமையாக விமர்சிக்கும் வழக்கம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.