பத்மாவத் திரைப்படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஹரியாணா மாநிலம் குருகிராமில் வன்முறை நடந்தது. அப்போது, பள்ளிக்கூட பேருந்து மீது சில வன்முறையாளர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
அப்போது உள்ளே இருந்து குழந்தைகள் அச்சத்தில் அலறினர். மேலும், சீறிவரும் கற்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள தலையில் கைகளை வைத்து மறைத்தவாறு பஸ் இருக்கையின் கீழ் புகுந்து கொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியானது.
15 விநாடிகள் நீளும் அந்த வீடியோ காட்சி காண்போரை பதறவைத்தது. இதற்கு இந்தியா முழுவதும் கண்டனக் குரல் எழுந்து வருகிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். பாலிவுட் நட்சத்திரங்களும் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கண்டனங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மாநில அரசின் நிர்வாக சீர்கேட்டையே பள்ளிக் குழந்தைகளின் பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதல் உணர்த்துவதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பாலிவுட நடிகை ஹூமா குரேஷி தனது ட்விட்டர் பக்கத்தில், "இது மிகவும் அவமானத்துக்குரியது. இந்தக் குழந்தைகளுக்கும் பத்மாவத் படத்துக்கும் என்னதான் தொடர்பு. ஆனால், ரஜபுத்திரர்கள் ஏன் குழந்தைகளைத் தாக்குகின்றனர். யாராவது எனக்கு இதை விளக்க முடியுமா? இது சரியா? தவறா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த கண்டனக் குரலுடன் அவர் அந்த வீடியோ லின்க்கையும் இணைத்துள்ளார்.