எட்டாவா: உலகக் கோப்பை இறுதிப் போட்டி லக்னோவில் நடைபெற்றிருந்தால் இந்தியா வென்றிருக்கும் என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் எட்டாவாவில் அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.19) இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடின. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா. இந்த சூழலில் இது குறித்து அரசியல் ரீதியாக பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார் அகிலேஷ்.
“குஜராத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டி லக்னோவில் நடைபெற்றிருந்தால் இந்திய அணிக்கு பலரது ஆசிர்வாதம் கிடைத்திருக்கும். இந்திய அணிக்கு பகவான் விஷ்ணு மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்களின் ஆசிர்வாதமும் இருந்திருக்கும். இந்தியா கோப்பையும் வென்றிருக்கும். இப்போது ஆடுகளத்தில் ஏதோ சிக்கல் இருப்பதாக சொல்லப்படுகிறது” என அவர் தெரிவித்தார்.
முன்னதாக, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக் கோப்பை லீக் போட்டியில் ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிய போது இந்த மைதானம் அமைந்ததில் தங்கள் கட்சிக்கு பங்கு இருப்பதாக மாநில அளவில் இயங்கும் அரசியல் கட்சிகளுக்கு இடையே விவாதம் எழுந்திருந்தது. இதில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் பாஜக இடையே விவாதம் நடந்தது.