இந்தியா

ஏப்பம் விடுவதைத் தவிருங்கள்: ஊழியர்களுக்கு எஸ்பிஐ அறிவுரை; ஆடை கட்டுப்பாடுகளும் விதிப்பு

மனோஜித் சஹா

இந்தியாவின் முதல் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, தன்னுடைய ஊழியர்களுக்கு உடை மற்றும் நடத்தை குறித்து சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக ஜனவரி 6 நடந்த கூட்டத்தில் ஸ்டேட் வங்கியின் மனிதவளத்துறை சார்பில் சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, ‘’பணி இடத்தில் நல்லொழுக்கத்தைப் பேணுவதை உறுதி செய்ய, உரிய ஆடை நெறிகளைப் பின்பற்ற வேண்டும்.

வங்கியின் ஒவ்வோர் ஊழியரும் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர்களே. இதனால் இருபாலின ஊழியர்களின் தோற்றம் வங்கியின் மீதான பார்வையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதனால் வங்கி ஊழியர்கள் அனைவரும் செருப்புகளுக்குப் பதிலாக ஷூக்கள் அணிந்துவர வேண்டும். டி-சர்ட்டுகள், ஜீன்ஸ், ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை. மூத்த ஆண் பணியாளர்கள் ஃபார்மல் ஆடைகளில் மட்டுமே வாடிக்கையாளர்களைச் சந்திக்க வேண்டும். அதேபோல மூத்த பெண் ஊழியர்கள், ஃபார்மலான இந்திய அல்லது மேற்கத்திய ஆடைகளையே அணிய வேண்டும்.

துர்நாற்றம்…

சவரம் செய்யப்படாத, தலை வாரப்படாத பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். உடலில் துர்நாற்றம் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும். காலணிகளை எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ஷூக்கள் மற்றும் பெல்ட் ஒரே நிறத்தில் இருக்க வேண்டும். கட்டம் போட்ட சட்டைகளுக்கு ஒரே நிறத்திலான டையும், ஒரே நிற சட்டைக்கு வடிவமைப்புகள் நிறைந்த டையையும் அணியவேண்டும்.

ஏப்பம்…

வாடிக்கையாளர்களுடனான சந்திப்பின்போதும் மற்றவர்களுடன் இருக்கும்போதும் ஏப்பம் விடுவதை அறவே தவிர்க்க வேண்டும். இது அடுத்தவர்களுக்கு உச்சபட்ச எரிச்சலை ஏற்படுத்துகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT