புதுடெல்லி: இஸ்ரேலுக்கும் ஹமாஸ் குழுவினருக்கும் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பாலஸ்தீனத்துக்கான இரண்டாவது தொகுதி உதவி பொருட்களை இந்தியா ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்தது. இதனை வெளியுறவுத் துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பாலஸ்தீன மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை நாம் தொடந்து வழங்கி வருகிறோம். இரண்டாவது ஏஐஎஃப்-எம்சிசி சி17 விமானம் 32 டன் உதவிப் பொருள்களை ஏற்றிக்கொண்டு எகிப்தின் எல்-அரிஷ் விமானநிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றது" என்று தெரிவித்துள்ளார்.
எல்-அரிஷ் விமான நிலையம் எகிப்தின் எல்லைப்பகுதியில் காசாவுக்கு செல்லும் நுழைவுப் பாதையான ரஃபாவில் இருந்து 45 கிமீ தள்ளியிருக்கிறது. காசாவுக்கான மனிதாபிமான உதவிகளைக் கொண்டு செல்வதற்கான ஒரே பாதையாக காசா மட்டுமே உள்ளது. இஸ்ரேஸ் ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து இந்தப் பாதை முழுமையாக செயல்படவில்லை.
முன்னதாக, இந்தியா, மருந்துகள் மற்றும் பேரிடர் நிவாரணப் பொருள்கள் உள்ளிட்ட பாலஸ்தீன மக்களுக்கான மனிதாபிமான அடிப்படையிலான தனது முதல் தொகுதி உதவி பொருட்களை அக்.22ம் தேதி அனுப்பிவைத்தது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாத குழுவினர் அக்.7ம் தேதி முன்னெப்போதும் இல்லாத அளவில் நடத்திய தாக்குதல் நடத்தியதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 240 பேர் பிணையக் கைதிகளால் சிறைபிடிக்கப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் ஹமாஸ் குழுவினரை முற்றிலும் அழிக்கும் நோக்கத்துடன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் - ஹமாஸ்களுக்கு இடையிலான இந்த மோதல் 7 வது வாரத்தை எட்டியுள்ளது. இஸ்ரேலின் பதில் தாக்குதலால் 5,000 குழந்தைகள் உட்பட 12,300 பேர் உ.யிரிழந்துள்ளதாக ஹமாஸ் குழுவினர் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 1400க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.
வான்வழித் தாக்குதல் காரணமாக டஜன்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட நிலையில், ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான தங்களின் தரைவழித் தாக்குதலை தெற்கு காசாவுக்கும் நீட்டிக்கப் போவதாக இஸ்ரேஸ் தெரிவித்துள்ளது.