இந்தியா

பெண் குழந்தை பிறந்தால் ரூ.2 லட்சத்தில் சேமிப்பு பத்திரம்: ராஜஸ்தானில் பாஜக தேர்தல் வாக்குறுதி

செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: பெண் குழந்தை பிறந்தால் ரூ.2 லட்சத்தில் சேமிப்பு பத்திரம், நிலம் ஏலம் விடப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பாலிசி ஆகியவை உட்பட ராஜஸ்தானில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தல் நவம்பர் 25-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள்தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன.

இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பாஜக.வின்தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

  • உஜ்வாலா திட்டத்தில் பயனாளிகளுக்கு காஸ் சிலிண்டருக்கு ரூ.450 மானியம் அளிக்கப்படும்.
  • 2.5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
  • காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைக்கப்படும்.
  • பெண்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் காவல் நிலையம் அமைக்கப்படும். அனைத்து காவல் நிலையங்களிலும் மகளிர் பிரிவு ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு நகரிலும் ஈவ் டீசிங் பிரச்சினையை தடுக்கும் பிரிவு தொடங்கப்படும்.
  • பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்கள் பெயரில் ரூ.2 லட்சம் மதிப்பில் சேமிப்பு பத்திரம் வழங்கப்படும்.
  • நிலம் ஏலம் விடப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பாலிசி வழங்கப்படும்.

இது போல் பல வாக்குறுதிகள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

SCROLL FOR NEXT