லண்டன்: இந்தியா இன்று மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நான்குநாள் அரசுமுறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், லண்டனில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் கோயிலில் தீபாவளி கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
இந்தியா இன்று மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது. இந்தியாவில் மிகச்சிறந்த தலைமை இருக்கிறது. தொலைநோக்குப் பார்வை இருக்கிறது. நல்ல ஆட்சி நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி எப்போது வெளிநாடுகளுக்கு சென்றாலும், பாரதத் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வாய்ப்பை தவறவிடுவதில்லை. மிகவும் கடினமான சூழ்நிலையில் ஜி20 தலைமையை நாங்கள் வெற்றிகரமாக பெற்றோம்.
இது போன்ற ஒரு நல்ல நாளில், நம் மக்களுடன் இருப்பதை காட்டிலும் வேறு எதுவும் மகிழ்ச்சி தரமுடியாது. நான் இப்போது இங்கிலாந்து வந்துள்ள நேரத்தில், தீபாவளி போன்ற ஒரு சந்தர்ப்பத்தில், நம் சமூக மக்களை வந்து சந்திக்கும் வாய்ப்பை தேடுவது இயற்கையானது. பிரதமர் மோடியின் அரசு 24 மணி நேரமும் வேலை செய்துகொண்டிருப்பது நம் அனைவருக்கும் தெரியும்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் ஒரு நீண்ட சந்திப்பை முடித்து விட்டு இங்கு வந்திருக்கிறேன். இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான உறவுகளைப் பற்றி விவாதிக்க எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. பாரதத்தின் மீதான பார்வை எவ்வளவு மாறிவிட்டது என்பதை நான் தற்போது காண்கிறேன்” இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.
முன்னதாக டவுனிங் வீதியில் உள்ள பிரதமர் இல்லத்தில், ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி இருவரையும் அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அவர்கள் இருவருக்கும், சிறிய விநாயகர் சிலை ஒன்றையும், விராட் கோலி கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் ஒன்றையும் ஜெய்சங்கர் பரிசளித்தார்.