இந்தியா

அரசு சுற்றறிக்கையை மீறி கேரளப் பள்ளியில் தேசியக் கொடி ஏற்றினார் ஆர்எஸ்எஸ் தலைவர்

செய்திப்பிரிவு

நாட்டின் 69-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள பள்ளியில் தேசியக் கொடியை ஏற்றினார்.

ஆர்.எஸ்.எஸ். முகாம் நடப்பதால் கடந்த மூன்று நாட்களாக பாலக்காட்டில் தங்கியிருக்கும் மோகன் பகவத், இன்று குடியரசு தின விழாவை ஒட்டி வியாஸ வித்யா பீடம் அவர் பள்ளியில் தேசியக் கொடியை ஏற்றினார்.

தேசியக் கொடியை ஏற்றிய அவர், "இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் குடியரசு தின வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டில் பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள் இருந்தும் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்" என்றார்.

கேரள அரசு சுற்றறிக்கையை மீறி..

முன்னதாக கடந்த 24-ம் தேதி கேரள மாநில அரசு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தது. அதில், அரசுத் துறைகளின் தலைவர்கள், அரசு அதிகாரிகள், பள்ளிக்கூட முதல்வர்கள் தவிர வேறு யாரும் குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்ற அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அரசு சுற்றறிக்கையும் மீறி மோகன் பகவத் தேசியக் கொடியை ஏற்றியிருக்கிறார்.

இதேபோல், கடந்த சுதந்திர தினத்தன்றும் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் தேசியக் கொடியை ஏற்றி சர்ச்சையைக் கிளப்பினார். இது விதிமுறைகளுக்கு எதிரானது எனக் கூறி சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடத்துக்கு மாவட்ட ஆட்சியர் மெமோ அனுப்பியது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT