புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் வைக்கோல்கள் எரிக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று அந்த மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக டெல்லியின் காற்று மாசு 400 முதல் 470 புள்ளிகளாக இருந்து வருகிறது. தலைநகரில் காற்று மாசு நேற்று 399 ஏ.கியூ.ஐ. ஆக இருந்தது. இந்த காற்றை சுவாசிக்கும் நபர் 30 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம் ஆகும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே டெல்லி காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தக் கோரி மூத்த வழக்கறிஞர் அப்ரஜிதா சிங் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், சுதான்ஷு துலியா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கறிஞர் அப்ரஜிதா சிங் கூறும்போது, “டெல்லியில் காற்று மாசு அபாயகர அளவை எட்டியுள்ளது. பஞ்சாப் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் வைக்கோல்களை எரிப்பதால் தலைநகரில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. அந்த மாநிலங்களில் வைக்கோல்களை எரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்’’ என்றார்.
பஞ்சாப் அரசு தலைமை வழக்கறிஞர் குர்மிந்தர் சிங் கூறும்போது, “ஏழை விவசாயிகள் வைக் கோல்களை எரித்து வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுக்கு மானிய உதவிகளை வழங்கி மாற்று வழியில் வைக்கோல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
மத்திய அரசு தரப்பில் முன்வைத்த வாதத்தில் டெல்லியை ஒட்டியுள்ள அண்டை மாநிலங்களில் வைக்கோல்களை எரிப்பதை தடுக்க மத்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் வைக்கோல்கள் எரிப்பதை தடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் கூறியதாவது: காற்று மாசு காரணமாக டெல்லி மக்களின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பிரச்சினை எழுகிறது. இதை தடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை ஆகும்.
டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் வைக்கோல்கள் எரிக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை அந்த மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக மத்திய கேபினட் செயலாளர் புதன்கிழமை சிறப்பு ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதில் டெல்லி காற்று மாசுபாட்டை தடுப்பது குறித்து சம்பந்தப்பட்ட அரசுகள், அமைப்புகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.
டெல்லி காற்று மாசுபாடு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டியது அவசியம். வைக் கோல்களை எரிப்பதற்கு பதிலாக அவற்றை அழிக்க அதிநவீன கருவிகளை பயன்படுத்த வேண்டும். இதற்கான கருவிகளை வாங்க மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி வழங்க வேண்டும். இதன்படி சம்பந்தப்பட்ட மாநில அரசு 25%, டெல்லி அரசு 25%, மத்திய அரசு 50% நிதியுதவியை அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 10-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.