இந்தியா

“ரூ.508 கோடி கொடுத்தேன்” - சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் மீது ‘ஆப்’ உரிமையாளர் புகார்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாஜக சமூகவலைதளமான எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில், மகாதேவ் செயலியின் (ஆப்) உரிமையாளர் சுபம் சோனி கூறுகையில், “ சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலின் ஆலோசனையின் பேரில் நான் துபாய்க்கு தப்பி வந்துள்ளேன். எனது ஆட்கள் கைது செய்யப்படாமல் இருக்க ரூ.508 கோடிஅரசியல்வாதிகளுக்கு அளித்துள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு பாகேல் இரண்டாவது முறையாக மறுப்பு தெரிவித்து நேற்று அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

மகாதேவ் செயலியின் உரிமையாளர் எனக் கூறிக் கொள்ளும் அந்த நபரை நான் இதுவரை பார்த்ததும் இல்லை, சந்தித்ததும் இல்லை. கூட்டத்தில் அல்லது விழாவில் பங்கேற்றாரா என்பது குறித்தும் ஞாபகம் இல்லை. பலமாதங்களாக மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கை விசாரித்து வரும்அமலாக்கத் துறை கூட அந்த நபரை மேலாளர் என்றுதான் அழைத்தது. ஆனால், அவர்தான் தற்போது உரிமையாளர் என்று கூறுகிறது. தேர்தலை மனதில் கொண்டு இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

பாஜகவின் அனைத்து தந்திரங்களையும் சத்தீஸ்கர் மக்கள் நன்குபுரிந்து வைத்துள்ளனர். இதற்கு அவர்கள் தேர்தலில் பதிலடி கொடுப்பர். இவ்வாறு பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மகாதேவ் ஆன்லைன் பந்தய செயலி உட்பட 21 சட்டவிரோத செயலிகளுக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT