பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டி.கே. சிவகுமார், பரமேஷ்வர் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. நீண்ட ஆலோசனைக்கு பிறகு முதல்வர் பதவி சித்தராமையாவுக்கும், துணை முதல்வர் பதவி டி.கே.சிவகுமாருக்கும் வழங்கப்பட்டது. பரமேஷ்வருக்கு உள்துறை அமைச்சர் பதவியும் காங்கிரஸ் மேலிடம் அளித்தது. அப்போது 5 ஆண்டு கால ஆட்சியில் சித்தராமையாவுக்கு முதல் இரண்டரை ஆண்டு, அடுத்த இரண்டரை ஆண்டு டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் டி.கே.சிவகுமாரின் ஆதரவாளர்கள் விரைவில் தங்களது தலைவருக்கு முதல்வர் பதவி கிடைக்க இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து செய்தியாளர்கள் முதல்வர் சித்தராமையாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், கர்நாடகாவில் 5 ஆண்டுகளும் நானே முதல்வராக தொடர்வேன்'' என்றார்.
இந்நிலையில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகனும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான பிரியங்க் கார்கே, ‘‘எனக்கும் முதல்வர் பதவி மீது ஆசை இருக்கிறது'' என்றார். இதன்மூலம் பிரியங்க் கார்கேவும் முதல்வர் பதவி மீது ஆசை இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனிடையே உள்துறை அமைச்சர் பரமேஷ்வர், ‘‘நானும் முதல்வர் போட்டியில் இருக்கிறேன். தலித் ஒருவர் முதல்வராக வேண்டும் என கட்சி மேலிடமும் மக்களும் விரும்பினால் நான் முன்னணியில் இருப்பேன்'' என தெரிவித்தார்.
இதுகுறித்து நேற்று துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறும்போது, ‘‘முதல்வர் விவகாரம் குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்கும். எனக்கு என்ன பதவி வழங்க வேண்டும் என சோனியாவும் ராகுல் காந்தியும் முடிவெடுப்பார்கள். முதல்வர் பதவி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்களுக்குள் எந்த மோதலும் இல்லை'' என விளக்கம் அளித்தார்.
முதல்வர் பதவி விவகாரத்தில் சித்தராமையா, டி.கே.சிவகுமார், பரமேஷ்வர், பிரியங்க் கார்கே இடையே வெளிப்படையான கருத்து வெளியாகியுள்ளதால் காங்கிரஸ் மேலிடத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இத்தகைய மோதல் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என மேலிடம் வருத்தம் அடைந்துள்ளது.