புதுடெல்லி: அமைதி ஒரு விருப்பம் அல்ல என்றும் அதுதான் ஒரே வழி என்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் உள்ள மானெக் ஷா மையத்தில் நடைபெற்ற சாணக்யா பாதுகாப்பு உரையாடல்-2023 நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் உரையாற்றினார். அப்போது அவர், உலகளாவிய பாதுகாப்பு மற்றும் அமைதிக்கான சமகாலச் சவால்களை பகுப்பாய்வு செய்வதற்கான இந்தச் சிந்தனை மன்றத்தின் கருத்தாக்கத்துக்காக ராணுவத்தைப் பாராட்டுகிறேன். தெற்காசியா மற்றும் இந்தோ-பசிபிக்கில் உள்ள பாதுகாப்பு சிக்கல்கள் குறித்த ஆழமான பகுப்பாய்வுகளுக்கு இது மிகவும் பொருத்தமான தளம்.
மிகச் சிறந்த ஆன்மிக சிந்தனையாளர்களின் 'கர்மபூமி' இந்தியா. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நாகரிக நெறிமுறைகளைக் கொண்டுள்ளது இந்தியா. ஆயுதங்கள் மூலம் நாட்டைப் பாதுகாப்பதும், வேதங்கள் மூலம் அதன் கலாச்சாரத்தை வளர்ப்பதும் இரண்டுமே முக்கியம் எனக் கூறியவர் சாணக்கியர். அன்று அவர் கூறியது, இன்றும் பொருத்தமாக உள்ளது.
உக்ரைனிலும், மேற்கு ஆசியாவிலும் நடைபெற்று வரும் மோதல்கள் கவலை அளிக்கின்றன. உலகமயமாக்கல் மற்றும் பொருளாதார பரஸ்பர சார்பு இருந்தபோதிலும் இதுபோன்ற மோதல்கள் நிகழ்கின்றன. பொருளாதார உபரிகளை கடின சக்தியாக மாற்றும் நாடுகளின் திறன் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், மிகவும் பயனுள்ள மோதல் தீர்வுக்கான ராஜீய நடவடிக்கைக்குப் புத்துயிர் அளிக்கவும் புதுமையான அணுகுமுறைகளை ஆராய வேண்டியது மிகவும் அவசியம்.
தேசிய பாதுகாப்பு என்பது இன்று எண்ணற்ற பண்புகள் மற்றும் திறன்களின் தொகுப்பாக உள்ளது. ஒரு வலுவான இயக்கத்தை உருவாக்கப் பல்வேறு துண்டுகள் ஒன்றிணைய வேண்டும். தற்போதைய சூழலுக்குப் பொருந்தும் தீர்வுகளைக் கண்டுபிடிப்பது மிகவும் அவசியம். பன்முக அணுகுமுறையின் மூலம் அமைதியை அடைவதற்கும், நிலைநிறுத்துவதற்கும், சிந்தனை, ஆலோசனை, தொடர்பு, இணக்கம், உரையாடல் ஆகியவற்றை ஒருங்கிணைப்பது மிகவும் முக்கியம் என தெரிவித்தார்.
ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார், விமானப்படை துணைத்தளபதி ஏர் மார்ஷல் ஏ.பி.சிங், நிலப்போர் ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜேஸ்வர்(ஓய்வு), ராணுவ துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எம்.வி.சுசீந்திர குமார், தூதர்கள், உயர்நிலை ஆணையர்கள் இதில் கலந்து கொண்டனர்.