புவனேஸ்வர்: நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக, கடந்த மே 19-ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதற்கான அவகாசம் முடிந்துவிட்டது. எனினும் ரிசர்வ் வங்கி மையங்களில் மட்டுமே அவற்றை மாற்றிக் கொள்ள முடியும்என்றும் ரிசர்வ் வங்கி கூறியது.
இந்நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ரிசர்வ் வங்கி வளாகத்தில் இந்த ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்ற ஏராளமானோர் குவிந்தனர்.
ஒருவர் ஒரு நேரத்தில் பத்து 2,000 நோட்டுகளை (அதாவது ரூ.20 ஆயிரம் வரை) மாற்றிக் கொள்ள முடியும் என்பதால் ஏராளமானோர் குவிந்தனர். கடந்த நான்கைந்து நாட்களாக இந்த நிலை நீடித்தது. இந்நிலையில் மத்திய விசாரணை அமைப்புகளுக்கும், ஒடிசா மாநிலபோலீஸ் பொருளாதார குற்றப்பிரிவு (இஓடபிள்யூ) அதிகாரிகளுக்கும் சந்தேகம் எழுந்தது.
வரிசையில் நின்று பணத்தைமாற்றுபவர்கள் உண்மையானவர் கள்தானா அல்லது வேறு யாருக்காவது பணத்தை மாற்றித் தருகிறார்களா என்று விசாரிக்கத் தொடங்கினர். அப்போதுதான், ரூ.300 அல்லது ரூ.400 என தினக்கூலி பெற்றுக் கொண்டு வேறொருவருக்காக பணத்தை அவர்கள் மாற்றித் தருகிறார்கள் என்று தெரியவந்தது.
வரிசையில் நின்று பணத்தை மாற்றிய ராஜா பிரதான் என்பவர் கூறும்போது, “நான் இன்று பத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றினேன். எனக்கு கூலியாக ரூ.400 கிடைத்தது. இதற்காக நான் எனது ஆதார் அட்டையை அடையாளமாகக் கொடுத்தேன்” என்றார். ஆனால், தான் யாருக்காக பணத்தை மாற்றிக் கொடுத்தேன் என்ற விவரத்தைக் கூற அவர் மறுத்துவிட்டார்.
அவர் மேலும் கூறும்போது, ‘‘என் குடும்பத்துக்காக இதைச் செய்கிறேன். அவர்கள் பட்டினி யின்றி சாப்பிடுவதற்கு இந்தப் பணம்உதவும். எனவே, இதைச் செய்ய ஒப்புக்கொண்டேன்’’ என்றார்.
ராஜா பிரதானைப் போலவே ஏராளமானோர் ரூ.300 முதல் ரூ.400வரை கூலியாக பெற்றுக் கொண்டு அங்கு பணத்தை மாற்றிக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் வரிசையில் நிற்கும் நபர்கள் யாரிடம் பணத்தைப் பெறுகிறார்கள் என்ற விவரங்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து ஆர்பிஐ மண்டல இயக்குநர் எஸ்.பி.மொஹந்தி கூறும்போது, “வரிசையில் நிற்பவர்களின் விவரங்கள், ஆதார் அட்டை போன்ற அடையாள அட்டைகள், சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து வைத்துள்ளோம். இதுதொடர்பாக விசாரிக்கிறோம். மத்திய விசாரணை அமைப்புகளுக்கும், ஒடிசா பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணைக்கும் நாங்கள் உதவத் தயார்’’ என்றார்.