எல்விஷ் யாதவ் (இடது), மேனகா காந்தி (வலது) 
இந்தியா

உ.பி பார்ட்டியில் பாம்பு விஷம்? - பிக்பாஸ் பிரபலத்துக்கு போலீஸ் வலை; மேனகா காந்தி கொந்தளிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் நொய்டா நகரில் நடந்த பார்ட்டி ஒன்றில் பாம்புகளையும், அவற்றின் விஷத்தையும் போதைக்காகப் பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் போலீஸார் 5 பேரை கைது செய்துள்ளனர். புகாருடன் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்ட வீடியோவில் இருந்த எல்விஷ் யாதவ் என்ற பிக்பாஸ் ஓடிடி பிரபலத்தை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும், நொய்டாவில் பார்ட்டி நடந்த இடத்திலிருந்து சில பாம்புகளையும், பாம்பு விஷத்தையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மொத்தம் 9 பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 5 ராஜநாக வகையைச் சேர்ந்தவையாகும்.

கைதான 5 பேரிடமும் போலீஸார் விசாரணை செய்தபோது அவர்கள் எல்விஷ் யாதவ் என்ற யூடியூபர், இன்ஃப்ளூயன்சர் மற்றும் பிக்பாஸ் ஓடிடி வெற்றியாளரான எல்விஷ் யாதவின் பெயரைக் கூறியுள்ளனர். எல்விஷ் யாதவ் நடத்தும் பார்ட்டிகளுக்கு வழக்கமாகவே இதுபோன்று பாம்புகளையும், பாம்பு விஷங்களையும் விநியோகிப்போம் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து எல்விஷ் யாதவ் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர்.

பிஎஃப்ஏ புகார்: பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் (People For Animals) என்ற பிராணிகள் நலன் பாதுகாப்பு சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் எல்விஷ் யாதவ் மற்றும் அவரைப் போன்ற யூடியூப் கன்டன்ட் கிரியேட்டர்ஸ் மீது புகார் கொடுத்திருந்தது. அதில் எல்விஷ் போன்ற யூடியூபர்கள் பாம்புகள், பாம்பு விஷங்களை நொய்டா பண்ணை வீடுகளில் நடக்கும் பார்ட்டிகளில் பயன்படுத்துகின்றனர் என்று வீடியோ ஆதாரங்களுடன் புகார் கொடுத்தது. பிஎஃப்ஏவின் அதிகாரி ஒருவர் இந்தப் புகாரைக் கொடுத்தார். அவருடைய புகாரில் நொய்டா பார்ட்டியின்போது வெளிநாட்டுப் பெண் ஒருவரை பாம்பு விஷத்தை அருந்தச் செய்ததுடன் விதவிதமான போதைப் பொருட்களையும் உட்கொள்ளச் செய்துள்ளனர் என்று கூறியிருந்தார். பிஎஃப்ஏ அமைப்பு, பாஜக எம்.பி. மேனகா காந்தியுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

அநாமதேய அழைப்பு: இந்நிலையில், பிஎஃப்ஏ அமைப்பானது அநாமதேய அழைப்பாளர் போல் எல்விஷா யாதவை தொடர்பு கொண்டு ஒரு பார்ட்டிக்கு பாம்பு விஷம் தேவை என்று கேட்டதாகவும், அப்போது எல்விஷ் இடைத்தரகர்களின் எண்ணை பகிர்ந்ததாகவும் கூறுகிறது. அவர்களைத் தொடர்பு கொண்டு நொய்டாவில் ஒரு குறிப்பிட்ட பண்ணை வீட்டுக்கு வரும்படி இடைத்தரகர்களுக்கு சொல்லிவிட்டு அந்தத் தகவலை நொய்டா போலீஸ், வனத் துறைக்கும் பகிர்ந்துள்ளது. இதனையடுத்து போலீஸார் நடத்திய ரெய்டில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆதாரம் கொடுங்கள்: இந்நிலையில், எல்விஷ் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், "இந்த வழக்கில் எனது பங்கு இருப்பதற்கான சாட்சி 0.1 சதவீதம் இருந்தால்கூட எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். நான் காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்கத் தயார். அதுவரை ஊடகங்கள் ஆதாரம் இல்லாத குற்றசாட்டினை முன்வைத்து எனது பேருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்க வேண்டாம்" என்று கூறியுள்ளார்.

மேனகா காந்தி சாடல்: எல்விஷ் யாதவ் பொய் சொல்வதாக மேனகா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ஊடகங்களுக்கு அவர் அளித்தப் பேட்டியில், "வனவிலங்குக்கு எதிரான குற்றங்களில் இது கடுமையானது. முதல் தர குற்றம். இதற்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி. எல்விஷ் யாதவ் வீடியோவில் சொல்வதுபோல் எந்த குற்றமும் செய்யவில்லை என்றால் எதற்காக அவர் ஓடி ஒளிகிறார்.

பாம்புகளுக்கு அதன் விஷம்தான் ஜீரணத்துக்கு உதவுகின்றன. விஷமின்றி அவற்றால் எந்த உணவையும் ஜீரணிக்க முடியாது. நாட்டில் இப்போது நாகங்கள், மலைப்பாம்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அவற்றை வைத்திருப்பதும், பிடித்து விஷத்துக்காகப் பயன்படுத்துவதும் குற்றம். இதன் பின்னணியில் பெரிய சதி கும்பல் இருக்கிறது.எல்விஷ் யாதவை நாங்கள் நீண்ட காலமாக கண்காணித்தே இந்தப் புகாரைக் கொடுத்துள்ளோம். அவர்கள் பாம்பு விஷத்தை விற்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். பாம்பு விஷமானது சிறுநீரகத்தையும், கல்லீரலையும் செயலிழக்கச் செய்யும். அதனால் தான் மூளையில் போதை ஏற்பட்டதுபோல் தலை சுற்றல் ஏற்படுகிறது. இது மிகவும் ஆபத்தானது" என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT