ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத் துறை அதிகாரி ஒருவரும் அவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டம், பஸ்ஸி பகுதியை சேர்ந்த விமல்புரா கிராமத்தை சேர்ந்தவர் நவல் கிஷோர் மீனா. இவர் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இம்பால் அமலாக்கத் துறை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சிட்ஃபண்ட் வழக்கு ஒன்றை தீர்த்து வைக்க, நவல் கிஷோர் ரூ.17 லட்சம் லஞ்சம் கேட்பதாக ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்புத் துறையில் (ஏசிபி) ஒருவர் புகார் அளித்தார்.
இப்புகாரை சரிபார்த்த ஏசிபி அதிகாரிகள் ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கியதாக நவல் கிஷோர்மீனா, அவரது கூட்டாளி பாபுலால் மீனா ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.
ஜெய்ப்பூர் மற்றும் ஆல்வார் மாவட்டங்களில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்ட கோட்புட்லி – பெஹ்ரோர் மாவட்டத்தில் உள்ள துணை பதிவாளர் அலுவலகம் ஒன்றில் இளநிலை உதவியாளராக பாபுலால் மீனா பணியாற்றி வருகிறார்.