இந்தியா

ஹேக்கிங் விவகாரம்: அரசு ‘தொடர்புடைய’ ஆதாரங்களைக் கேட்டு ஆப்பிள் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: எதிர்க்கட்சி எம்.பி.க்கள், தலைவர்களின் ஐ-போன்களில் ‘அரசின் உறுதுணை’யுடன் ஹேக்கிங் முயற்சி நடந்ததாக குற்றம்சாட்டப்பட்ட விவகாரத்தில், அதற்கு உரிய ஆதாரத்தைக் கேட்டு ஆப்பிள் நிறுவனத்துக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, சம்பந்தப்பட்ட ஐ-போன்களில் நடந்ததாக கூறப்படும் ஊடுருவல் முயற்சி என்பது அரசு ஆதரவுடன் நடந்துள்ளது என்ற குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை ஆப்பிள் நிறுவனத்தின் பிரதிநிதிகளிடம் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் கேட்டுள்ளது.

முன்னதாக, சிவசேனா உத்தவ் பிரிவு எம்.பி பிரியங்கா சதுர்வேதி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பிமஹுவா மொய்த்ரா, ஆம் ஆத்மிஎம்.பி ராகவ் சதா, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்.பி ஒவைசி, காங்கிரஸ் எம்.பி சசிதரூர் ஆகியோர் உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலரின் ஐ-போன்களில் நிதியுதவி மற்றும் நவீன வசதிகள் பெற்ற சிலர் ஊடுருவ முயற்சிப்பதாக, அவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செவ்வாய்கிழமை தெரிவித்திருந்தனர். மேலும், இந்த எச்சரிக்கையை மேற்கண்ட தலைவர்கள் அவர்களின் எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்து. எதிர்க்கட்சி தலைவர்களின் ஐ-போன்களை ஒட்டுக் கேட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

இது குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “இந்த விவகாரத்தில் மத்திய அரசு அக்கறை செலுத்துகிறது. இதன் பின்னணியில் செயல்படுபவர்களின் விவரம் அறியப்படும். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளோம். ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை இந்தியாவுக்கு மட்டும் விடுக்கவில்லை. உலகம் முழுவதும் 150 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, மதிப்பீடு அடிப்படையில் இந்த எச்சரிக்கையை ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ளது. குறிப்பிடும்படியான தகவல் அவர்களிடம் இல்லை என்பது அவர்கள் அனுப்பிய இ-மெயிலில் தெரிகிறது” என்று விளக்கம் அளித்திருந்தார்.

இதனிடையே, திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா இந்த விவகாரம் குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க உடனடியாக தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT