பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்துக்கு அருகில் சுஹேல்தேவ் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது. செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி அளவில் இந்த அதிவிரைவு ரயிலின் என்ஜின் மற்றும் 2 பெட்டிகள் தடம்புரண்டன. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனை வடக்கு சென்ட்ரல் ரயில்வே பிரிவு உறுதி செய்துள்ளது.
“சுஹேல்தேவ் எக்ஸ்பிரஸ் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் என்ஜினின் இரண்டு சக்கரங்கள் தடத்தில் இருந்து வெளியேறியது. இதனால் என்ஜினை அடுத்த இரண்டு பெட்டிகளும் தடம்புரண்டன. இதில் உயிரிழப்பு ஏதும் இல்லை. இந்த தடத்தில் ரயில் சேவை இயல்பு நிலையில் உள்ளது. செவ்வாய்க்கிழமை 9 மணி அளவில் இது நடந்தது. தற்போது இந்த ரயில் புறப்பட உள்ளது. ரயில் தடம்புரண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்” என வடக்கு செனட்ரல் ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமான்ஷு சேகர் உபாத்யா தெரிவித்துள்ளார்.
இந்த ரயிலுக்கு பச்சை விளக்கு சிக்னல் கொடுத்த சில நொடிகளில் நடைமேடை 6-ல் தடம்புரண்டதாக தகவல். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆந்திராவில் ரயில் விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 14 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தடம்புரண்ட சுஹேல்தேவ் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், டெல்லி ஆனந்த் விஹார் மற்றும் உத்தரபிரதேசம் காஸிபூர் நகரத்தூக்கு இடையில் இயங்கி வருகிறது.