இந்தியா

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி அட்டர்னி ஜெனரல் கருத்துக்கு காங். எதிர்ப்பு

செய்திப்பிரிவு

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற காங்கிரஸுக்கு தகுதி இல்லை என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) தெரிவித்துள்ள கருத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மக்களவையின் மொத்த உறுப்பினர்களில் 10 சதவீதத்தைப் பெறும் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து அளிக்கப்படுகிறது. காங்கிரஸுக்கு 44 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளதால் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படவில்லை. எனினும் மிகப் பெரிய கட்சி என்ற அடிப்படையில் தங்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று அந்தக் கட்சி வலியுறுத்தி வருகிறது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஆரம்பம் முதலே மோதல்போக்கு நீடித்து வருகிறது.

இந்நிலையில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோட்டகி மத்திய அரசிடம் வெள்ளிக்கிழமை அளித்த பரிந்துரையில், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற காங் கிரஸுக்கு தகுதி இல்லை என தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி நிருபர்களிடம் கூறியதாவது:

நாடாளுமன்ற பாரம்பரியங்கள் மற்றும் நடைமுறைகளின்படி இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரஸ், எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறத் தகுதியானது. அட்டர்னி ஜெனரலின் கருத்து வெறும் ஆலோசனை மட்டுமே. அவரது கருத்து மத்திய அரசைக் கட்டுப்படுத்தாது.

நாட்டை வழி நடத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் அமைப்புகளின் நியமனங்களில் எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசனை மிகவும் அவசிய மானது.

காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து அளிக்க மறுப்பது எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதற்கு சமமாகும். இது ஜனநாயக விரோதம். ஏனெனில் ஜனநாயகத்தின் சாராம்சமே ஆளும்கட்சியும் எதிர்க் கட்சியும்தான்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதே பிரச்சினை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி கூறியபோது, அட்டர்னி ஜெனரல் வெறுமனே அரசின் நிலைப்பாட்டை மட்டும் திரும்பக் கூறவில்லை, அரசு விரும்பியதையே கூறியுள்ளார் என்றார்.

மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்து அளிக்கப்படாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்திருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

SCROLL FOR NEXT