போபால்: மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவருடன் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்றும், அது பாஜக பரப்பும் பொய் பிரச்சாரம் என்றும் மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
தனது ஜபுவா மற்றும் கதேகான் பயணத்தை திக்விஜய் ரத்து செய்ததைத் தொடர்ந்து, அவருக்கும் கமல் நாத்துக்கும் இடையில் கருத்து வேறுபாடு என சில ஊடகங்களில் தகவல் வெளியானதைத் தொடர்ந்து திக்விஜய் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "தற்போது பாஜகவில் உட்கட்சி பூசல் உச்சத்தில் உள்ளது. அதனை மறைப்பதற்காக, அவர்கள் காங்கிரஸ் தலைவர்களுக்குள், குறிப்பாக எனக்கும் கமல்நாத்துக்கும் இடையில் பூசல் இருப்பதாக பணம் கொடுத்து பொய் செய்தி பரப்புகிறார்கள். பாஜகவை வீழ்த்துவதற்கு ஒவ்வொரு காங்கிரஸ் தலைவர்களும் ஒற்றுமையாகவும் முனைப்புடனும் செயல்படுகிறோம். சில அமைப்பு சார்ந்த மற்றும் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சிச் செயலாளர் விரும்பியதால் நான் எனது ஜபுவா மற்றும் கதேகான் பயணத்தை ரத்து செய்தேன். காங்கிரஸில் உட்கட்சி பூசல் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மத்தியப் பிரதேச பாஜக மாநில செயலாளர் ராஜ்நீத் அகர்வால் கூறுகையில், "கமல்நாத்துக்கும் திக்விஜய் சிங்குக்கும் இடையிலான உரையாடலின் வீடியோ பதிவு மூலம் அவர்களுக்கு இடையில் இருக்கும் கருத்துவேறுபாடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கமல் நாத்தும் அவரது ஆதரவாளர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து திக்விஜய் சிங்கை ஒதுக்கி வைப்பதே இதற்கான தெளிவான ஆதாரம்.
வேட்பாளர் பட்டியலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பின்னர் உண்டான மோதலில் திக்விஜய் சிங்கின் சட்டையை கிழிக்கவேண்டும் என்று கமல் நாத் விரும்பினார். வேட்பாளர் தேர்வுக்கு கமல்நாத்தே பொறுப்பு என திக்விஜய் சிங் கூறிய பின்னர், கட்சியின் தலைவர் என்ற முறையில் தேர்தல் பத்திரங்களில் கமல்நாத் கையெழுத்திட்டார். அவர்களுக்குள் கருத்துவேறுபாடு உள்ளதுக்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும். காங்கிரஸ் தொண்டர்கள் வெளிப்படையாக போஸ்டர்களில் உள்ள திக்விஜய் சிங்கின் உருவப்படத்தின் மீது மை பூசினர். இதற்கும் பாஜகவுக்கும் என்ன சம்ந்தம். இவை அனைத்தும் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களால் செய்யப்படுகின்றன" என்று கூறினார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா, திக்விஜய் சிங் மற்றும் கமல் நாத்தை, காவியப்படமான ஷோலேவின் அமிதாபச்சன் தர்மேந்திராவுடன் ஒப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஷோலை படத்தில் தர்மேந்திராவுக்கும் அமிதாப் பச்சனுக்கும் இடையில் உள்ள உறவே திக்விஜய் சிங்குக்கும் கமல்நாத்துக்கும் இடையில் உள்ள உறவு. படத்தின் வில்லன் கப்பர் சிங்கால் அவர்களுக்குள் சண்டை வளர்க்க முடியவில்லை, அதேபோல் இங்கே பாஜகவாலும் நிஜத்தில் சண்டையை உருவாக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை குறிவைத்து பாஜக வீடியோ வெளியிட்டு தாக்குதல் தொடுத்திருக்கும் நிலையில், தனக்கும் திக் விஜய் சிங்குக்கும் இடையில் இருக்கும் உறவு அரசியல் சார்ந்தது இல்லை என்று கமல் நாத் தெரிவித்துள்ளார்.