இந்தியா

திரிணமூல் எம்.பி. மொய்த்ரா நவ.2-ல் ஆஜராக வேண்டும்: மக்களவை நெறிமுறை குழு திட்டவட்டம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா, அதானி குழுமம் தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து பெரும் தொகையை லஞ்சமாக பெற்றுள்ளார் என புகார் எழுந்தது. இப்புகார் தொடர்பாக மக்களவை நெறிமுறைக் குழு விசாரித்து வருகிறது.

இந்தக் குழு முன்பாக, பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை நேரில் ஆஜராகி, மொய்த்ராவுக்கு எதிராக வாக்குமூலம் அளித்தனர்.

இதையடுத்து அக்டோபர் 31-ம் தேதி விசாரணைக்கு வருமாறு மஹுவா மொய்த்ராவுக்கு நெறிமுறைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு மஹுவா மொய்த்ரா நேற்று முன்தினம் எழுதிய கடிதத்தில், “வரும் 31-ம் தேதி ஆஜராக முடியாத சூழலில் இருக்கிறேன். நவம்பர் 5-ம் தேதி ஆஜராக தயாராக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் மக்களவை நெறிமுறைக் குழு நேற்று அளித்துள்ள பதிலில், “அக்டோபர் 31-ம் தேதிக்கு பதிலாக நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும், இதற்கு மேல் கால நீட்டிப்பு வழங்க முடியாது” என்று மஹுவா மொய்த்ராவிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT