மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்து இமெயில் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியை அச்சுறுத்தி அவருக்கு ஒரு இமெயில் வந்துள்ளது. அதில், தங்களுக்கு ரூ 20 கோடி கொடுக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவர் கொல்லப்படுவார் என்றும், தங்களிடம் மிகச் சிறந்த துப்பாக்கிச் சுடும் வீரர்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பொறுப்பாளர், மும்பையின் கம்தேவி காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டம் 387, 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.