இந்தியா

‘அதிநவீன ஆயுதங்களை கையாளுவதில் கில்லாடி’ - இன்டர்போல் தேடும் 19 வயது ஹரியாணா கேங்ஸ்டர்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஹரியாணாவைச் சேர்ந்த 19 வயது கேங்ஸ்டர் இளைஞர் ஒருவருக்கு எதிராக இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. அவர் பெயர் யோகேஷ் காடியன். இவர் பல கொலை முயற்சிகள் மற்றும் குற்றச் சதி செய்ததாக இன்டர்போல் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த யோகேஷ் காடியன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது 17-வது வயதில் போலி பாஸ்போர்ட் மூலம் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றுள்ளார். பஞ்சாப் தாதாவாக அறியப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோயை கொலை செய்ய முயற்சித்த கும்பலில் யோகேஷ் முக்கியமான நபர் என்று சொல்லப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் யோகேஷ், அங்கும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் பாபின்ஹா கும்பலில் இணைந்துள்ளார் எனத் தகவல் கிடைத்துள்ளதாக இன்டர்போல் தெரிவித்துள்ளது.

அதிநவீன ஆயுதங்களை கையாளுவதில் நிபுணத்துவம் பெற்ற யோகேஷை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ள இன்டர்போல் அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக விடுக்கப்பட்ட அறிவிப்பில், "குற்றச் சதி, கொலை முயற்சி, தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வைத்திருத்தல், அவற்றை பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் யோகேஷ் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, யோகேஷுக்கு காலிஸ்தானி தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டின்பேரில் சமீபத்தில் என்ஐஏ யோகேஷுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியதும், மேலும் அவரை பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ.1.5 லட்சம் சன்மானம் தரப்படும் என அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT