தமிழகம், கர்நாடகா மாநிலங் களின் ஆளுநர் கே.ரோசய்யா, பிரதமர் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இதையடுத்து ரோசய்யா தனது பதவியை ராஜினாமா செய்ய இருப் பதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.
கடந்த திங்கள்கிழமை இரவு டெல்லி வந்த தமிழக ஆளுநர் ரோசய்யா, சாணக்யபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். செவ்வாய்க்கிழமை மதியம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பு, மரியாதை நிமித்தமானது என அரசு தரப்பில் கூறப்பட்டது. அதன் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் ரோசய்யா சந்தித்தார். இதையடுத்து ரோசய்யா தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தலைநகரில் பரபரப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் கூறியதாவது: “பதவியேற்பு விழாவிற்கு வந்தபோதே பிரதமர் மோடியை சந்திக்க ரோசய்யா முயற்சி செய்தார். ஆனால், அந்த சந்திப்பு நடைபெறவில்லை.
அதன் பிறகு டெல்லி வந்த முதல்வர் ஜெயலலிதா, பிரதமரை சந்தித்தபோது, தமிழக ஆளுநரை மாற்ற வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். எனவே, அவரை மாற்றும் எண்ணத்தை மத்திய உள் துறை அமைச்சகம் கைவிட்டிருக் கிறது. இப்போது ரோசய்யாவை டெல்லியில் இருந்து யாரும் அழைக்கவில்லை. அவர் தானா கவே பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டு வந்திருந்தார்” என்றனர்.
பிரதமர், உள்துறை அமைச்சரு டனான சந்திப்புக்கு பின்பு குடிய ரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை யும் ரோசய்யா சந்தித்துப் பேசவுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்பு, உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், நாகலாந்து, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் ஆளுநர்கள் பதவி விலகியுள்ளனர். மேலும் சில மாநிலங்களின் ஆளுநர்கள் பதவி விலகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.