கேரள கல்வி அமைச்சர் சிவன் குட்டி | கோப்புப் படம் 
இந்தியா

இந்தியாவுக்கு பதில் ‘பாரத்’ - என்சிஇஆர்டி பரிந்துரையை நிராகரிப்பதாக கேரள அரசு அறிவிப்பு

செய்திப்பிரிவு

கொல்லம் (கேரளா): இந்தியாவுக்குப் பதில் ‘பாரத்’ என்ற பதத்தை சமூக அறிவியல் பாடத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற என்.சி.இ.ஆர்.டி-யின் பரிந்துரையை கேரளா நிராகரிப்பதாக அம்மாநில கல்வி அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கொல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில கல்வி அமைச்சர் சிவன் குட்டி, "சமூக அறிவியலுக்கான என்சிஇஆர்டி கமிட்டி அளித்த பரிந்துரைகளை கேரளா நிராகரிக்கிறது. அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி இந்தியா அல்லது பாரத் என்ற வார்த்தையைப் பயன்படுத்த குடிமக்களுக்கு உரிமை உண்டு. வரலாற்றை திரிக்கும் நடவடிக்கையை கேரளா நிராகரிக்கிறது. முன்பு என்.சி.இ.ஆர்.டி சில பகுதிகளை நீக்கியபோது, கூடுதல் பாடப் புத்தகங்களாக அவற்றை கேரளா பாடத்திட்டத்தில் சேர்த்தது. அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக, அறிவியலுக்குப் புறம்பாக, உண்மையான வரலாற்றைத் திரிபுபடுத்தும் விஷயங்களை பாடப் புத்தகங்கள் மூலம் குழந்தைகளுக்குக் கற்பிக்க என்.சி.இ.ஆர்.டி நினைத்தால், கேரளா கல்வி ரீதியாக விவாதங்களை நடத்தி தற்காத்துக் கொள்ளும். மாநிலப் பாடத்திட்டக் குழுவைக் கூட்டி, கல்வி நலனைக் கருத்தில் கொண்டு மாநிலத்தில் தற்போது பயன்படுத்தப்படும் 44 பாடப் புத்தகங்களைத் தயாரிக்கும் பணியை விரிவாக விவாதிப்போம்" என்று தெரிவித்தார்.

முன்னதாக, டெல்லியில் அண்மையில் ஜி20 மாநாடு நடைபெற்றது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வந்த உலகத் தலைவர்களுக்கு இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அது தொடர்பான அழைப்பிதழில் இந்தியக் குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரதத்தின் குடியரசுத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, பிரதமர் வெளிநாட்டுப் பயண அறிவிப்பிலும், ஜி20 மாநாட்டில் பிரதமர் இருக்கையிலும் ‘பாரத்’ என்றே குறிப்பிடப்பட்டது பெரும் விவாதத்தை கிளப்பியது. இதனால், இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றும் பணியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.

இந்த நிலையில், பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (என்.சி.இ.ஆர்.டி ) சார்பில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் சமூக அறிவியல் பாடத்தை மாற்றி அமைப்பது குறித்து என்.சி.இ.ஆர்.டி. குழு ஆய்வு செய்தது. நேற்று நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டத்தில், சி.பி.எஸ்.இ பாடப் புத்தகத்தில் ‘இந்தியா’ என்ற பெயரை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக ‘பாரத்’ என்று மாற்ற பரிந்துரை வழங்கி உள்ளது என அந்தக் குழுவின் தலைவர் ஐஸக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “அரசியலமைப்பின் பிரிவு 1(1) ஏற்கெனவே இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும் என்று கூறுகிறது. பாரதம் என்பது பழமையான பெயர். பாரதம் என்ற பெயரின் பயன்பாடு 7,000 ஆண்டுகள் பழமையான விஷ்ணு புராணம் போன்ற பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பாடப் புத்தகங்களில் இந்துக்களின் வெற்றி குறித்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ பாடப் புத்தகங்களில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என்று மாற்ற என்.சி.இ.ஆர்.டி குழு (NCERT panel) பரிந்துரைத்துள்ளது” என்றது. என்சிஇஆர்டியின் இந்த அறிவிப்புக்கு கேரளா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT