இந்தியா

ப்ரீத்தி ஜிந்தா நெஸ் வாடியா இடையே வாக்குவாதம் ஏற்படவில்லை: வாடியா தரப்பு சாட்சிகள் தகவல்

செய்திப்பிரிவு

ப்ரீத்தி ஜிந்தா நெஸ் வாடியா இடையே வாக்குவாதம் ஏதும் ஏற்படவில்லை என்று வாடியா தரப்பு சாட்சிகள் போலீஸில் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதம் 30-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே ஐபிஎல் போட்டி நடந்தபோது, மைதானத்தில் வைத்து தன்னிடம் தொழிலதிபர் நெஸ் வாடியா பாலியல்ரீதியாக தகாத முறையில் நடக்க முயற்சித்ததாகவும், மோசமான வார்த்தைகளில் பேசியதாகவும் ப்ரீத்தி ஜிந்தா போலீஸில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தனது முன்னாள் காதலரான நெஸ் வாடியா மீது ப்ரீத்தி ஜிந்தா அளித்த இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சம்பவ இடத்தில் இருந்து வீடியோ கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். ஆனால் அதில் இருந்து குறிப்பிடத்தக்க ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை.

இதனிடையே தான் எந்த தவறும் செய்யவில்லை என்பதற்கு ஆதாரமாக சம்பவ இடத்தில் தன்னுடன் இருந்தவர்கள் பட்டியலை நெஸ் வாடியா போலீஸில் அளித்தார். அவர்களிடம் விசாரித்தால் உண்மை தெரியவரும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதில் ஒருவரான ஃபரா ஒமெர்பாய் போலீஸில் கூறியுள்ளதாவது: ப்ரீத்தி ஜிந்தாவிடம் நெஸ் வாடியா தவறாக நடந்து கொண்டார் என்று கூறப்படும் இடத்தில் நானும் இருந்தேன். ஆனால் நான் பார்த்தபோது அவர்களுக்குள் எந்த வாக்குவாதமும் நடைபெறவில்லை. போட்டி நடந்து கொண்டிருந்தபோது ப்ரீத்தி ஜிந்தா அமர்ந்திருந்த இடத்துக்கு வந்த வாடியா சேரில் சாய்ந்தபடி குனிந்து அவரிடம் ஏதோ பேசினார். பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் கடுமையான வாக்குவாதம் ஏதும் நடைபெறவில்லை என்றார்.

பூஜா தத்லானி என்பவர் அளித்த சாட்சியத்தில், ப்ரீத்தி ஜிந்தா நெஸ் வாடியா இடையே வாக்குவாதம் எதுவும் நிகழவில்லை என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT