புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தனியாக வசித்து வந்த பெண்ணுக்கு, உள்ளூர் நபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதில் கர்ப்பம் அடைந்த அந்த பெண் குழந்தை பெற்றுள்ளார். அந்த குழந்தை இறந்த நிலையில் குட்டை ஒன்றில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து குழந்தை பெற்ற பெண் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, விசாரணை நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை சத்தீஸ்கர் உயர்நீதிமன்றமும் கடந்த 2010-ம் ஆண்டு உறுதி செய்தது. இதை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்ட பெண் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மனுவை நீதிபதிகள் அபய் எஸ் ஒகா மற்றும் சஞ்சய் கரோல் ஆகியார் அடங்கிய அமர்வு விசாரித்து அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
கிராமத்தில் தனியாக வாழ்ந்தார் என்பதற்காக, ஒரு பெண் மீது வலுவான ஆதாரம் இல்லாமல் குழந்தையை கொன்றதாக குற்றம் சுமத்தக் கூடாது. ஒருவரின் அந்தரங்க உரிமையை அவமதிக்க கூடாது.
வலுவான ஆதாரம் இல்லாமல் அந்த பெண் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குழந்தையை அந்தப் பெண் குட்டையில் வீசினார் என்பதை பார்த்ததாக எந்த சாட்சியும் இல்லை. குழந்தை இறந்த நிலையில் பிறந்ததா என்பதிலும் மருத்துவரின் வாக்குமூலம் தெளிவாக இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளை வைத்துகீழ் நீதிமன்றங்கள் சாட்டியுள்ள குற்றத்தை ஒப்புக் கொள்ள முடியாது. ஊகத்தின் அடிப்படையில் இந்த குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆதாரமின்றி விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பைஉயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. எனவே, குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை தண்டனையிலிருந்து விடுவிக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.