புதுடெல்லி: இந்தியர்களுக்கு ரூ.100 கோடிக்கு மேல் இழப்பை ஏற்படுத்திய சைபர் முறைகேடு தொடர்பாக, நாடு முழுவதும் 76 இடங்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தி கம்ப்யூட்டர் சாதனங்களை பறிமுதல் செய்தது.
இதுகுறித்து சிபிஐ செய்தி தொடர்பாளர் கூறியிருப்பதாவது: அப்பாவி இந்தியர்களை ஏமாற்றி ரூ.100 கோடிக்கு மேல் கிரிப்டோ ஊழல் நடைபெற்றுள்ளது. இது தவிர சைபர் நிதி முறைகேடுகள் தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நிதி உளவுப் பிரிவு அளித்த தகவல்கள்படி இந்த வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது.
‘ஆபரேஷன் சக்ரா-2’ தொழில்நுட்ப உதவிகள் அளிப்பதாக கூறி, வெளிநாட்டினரை கால் சென்டர் மையங்கள் ஏமாற்றியதாக அமேசான் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களும் 2 புகார்கள் அளித்தன. இதனால் சைபர் முறைகேடுகளை கண்டுபிடிக்க ‘ஆபரேஷன் சக்ரா-2’ என்ற பெயரில் நாடு முழுவதும் 9 கால் சென்டர்கள் உட்பட 76 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.
உ.பி., ம.பி., கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம், ஹரியாணா, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், டெல்லி மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
அப்போது 32 செல்போன்கள், 48 லேப்டாப்கள், ஹார்டு டிஸ்க்குகள், மற்றும் பென் டிரைவ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏராளமான வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன. அப்பாவி மக்களை ஏமாற்ற பயன்படுத்தப்பட்ட 15 இ-மெயில் முகவரிகளும் முடக்கப்பட்டன. இவ்வாறு சிபிஐ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.