இந்தியா

விசாரணை கமிஷனை நீதிமன்றமாக கருத முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

எம்.சண்முகம்

விசாரணைக் கமிஷனின் தலைவராக, பதவியில் உள்ள நீதிபதி இருந்தாலும், அதை நீதிமன்றமாக கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே மீதான முறைகேடுகளை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி குல்தீப் சிங் தலைமையில் அப்போது விசாரணைக் கமிஷன் அமைக் கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.

இந்தக் கமிஷனின் அறிக்கையை விமர்சித்து, கடந்த 1990-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி ஆங்கில நாளிதழ் ஒன்றில் தலையங்கம் வெளிவந்தது. அப்பத்திரிகையின் ஆசிரியராக இருந்த எழுத்தாளர் அருண் ஷோரி விமர்சனம் செய்திருந்தார்.

அப்போது குல்தீப் சிங் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்ததால், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது. பாரதிய ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமியும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு, பதவியில் உள்ள நீதிபதி ஒருவர் தலைமை வகிக்கிறார் என்பதற்காக விசாரணைக் கமிஷனை நீதிமன்றமாகக் கருத முடியுமா? நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. எனவே, இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் அனில் தவே, எஸ்.ஜே.முகோபாத்யாய, தீபக் மிஸ்ரா, சிவ கீர்த்தி சிங் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பு விவரம்:

விசாரணைக் கமிஷன் சட்டம், 1952-ன் படி, விசாரணைக் கமிஷனுக்கு சிவில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட விசாரணைக் கமிஷனின் தலைவராக உச்ச நீதிமன்றத்தில் பதவியில் உள்ள நீதிபதி இருந்தாலும், அவர் தன்னுடன் நீதிமன்ற அதிகாரத்தை எடுத்துச் செல்வதில்லை.

விசாரணைக் கமிஷனின் அதிகார வரம்புகள் சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு நீதி பரிபாலனம் செய்வதற்கான அதிகாரம் வழங்கப்படவில்லை. விசாரணை நடத்தி அரசுக்கு பரிந்துரைகள் மட்டுமே தர முடியும். விசாரணைக் கமிஷனின் தலைவராக, பதவியில் உள்ள நீதிபதி இருந்தாலும், அதை நீதிமன்றமாக கருத முடியாது. எனவே, நீதிமன்ற அவமதிப்பு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்மூலம் எழுத்தாளர் அருண் ஷோரிக்கு எதிராக 24 ஆண்டுகளாக நடந்து வந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

SCROLL FOR NEXT