நிதிஷ் குமார் | கோப்புப்படம் 
இந்தியா

‘மீண்டும் பாஜகவுடன் இணையும் திட்டமில்லை?’ - பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் உறுதி 

செய்திப்பிரிவு

பாட்னா: மீண்டும் பாஜகவுடன் இணைந்து செயல்படும் எண்ணமில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ள பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், மோதிஹாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மோதிஹாரியில் உள்ள மகாத்மா காந்தி மத்திய பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் வியாழக்கிழமை கலந்து கொண்டார். அவர் பேசும் போது மேடையில் இருந்த பாஜகவைச் சேர்ந்த தலைவரைச் சுட்டிக்காட்டி, "இங்கே இருக்கும் அனைவரும் எங்கள் நண்பர்கள். நான் உயிருடன் இருக்கும் வரை நீங்கள் என்னுடன் இணைந்து இருப்பீர்கள்" என்று பேசினார். பிஹார் முதல்வரின் இந்தப் பேச்சினைத் தொடர்ந்து, நிதிஷ் குமார் மீண்டும் பாஜக பக்கம் சாயப்போவதாக ஊடகங்களில் ஊகங்கள் வெளியாகின. இந்த ஊகங்கள் அனைத்தும் பொய் என்று இன்று (சனிக்கிழமை) தெளிவுபடுத்தியுள்ள அவர், தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "அங்கு மேடையில் (பட்டமளிப்பு விழாவில்) இருந்தவர்களிடம் பிஹார் மாநில அரசின் பணிகளை மக்களிடம் நினைவுபடுத்த வேண்டும். இல்லையென்றால் மக்கள் அதை மத்திய அரசு செய்யதாக தவறாக எடுத்துக்கொள்கிறார்கள் என்று கூற விரும்பினேன்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் சக்தி யாதவும் இதனைத் தெளிவுபடுத்தி இருந்தார். அன்று பாஜகவின் ராதா மோகன், பட்டமளிப்பு விழாவில் முன்னால் அமர்ந்திருந்தார். அதனால் முதல்வர் அவர்களின் தனிப்பட்ட உறவினை பற்றி பேசினார். அவர் எந்தக் கட்சியையும் குறிப்பிடவில்லை. மக்கள் அதனைத் தவறாக சித்தரித்து விட்டனர்" என்றார்.

இதுகுறித்து பாஜகவும் நிதிஷுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. "நிதிஷ் குமார் விலக்கப்பட்டுவிட்டார். நாங்கள் அவரை விலகிக்கொள்ளச் சொன்னோம். மாநில வளர்ச்சியில் எங்களுக்கும் சேர்ந்தே பங்கு இருக்கிறது. ஆனால் கொள்கையாளவில் இருவருக்கும் மோதல் இருக்கிறது. இதில் பாஜக தெளிவாக உள்ளது. நிதிஷ் குமாருடன் எந்த உறவும் இல்லை என்று அமித் ஷா கூறிவிட்டார்" என்று மாநில பாஜக தலைவர் சாகேத் சவுதரி கூறியிருக்கிறார்.

இதனிடையே மாநில பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி,"ராதா மோகன் சிங்குடனான தனிப்பட்ட நட்பினை எடுத்துக்கூறி நிதிஷ் குமார் தற்போதைய கூட்டணிக்கட்சிகளான ஆர்டிஜே மற்றும் காங்கிரஸை பயமுறுத்துவும் குழப்பவும் விரும்புகிறார் என்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள நிதிஷ் குமார், "முன்பு சுஷில் குமார் என்னவாக இருந்தார்? நீங்கள் சுஷில் குமார் மோடி பற்றி மறந்து விட்டீர்களா? அவர் இங்கு இருந்த போது, தேஜஸ்வி யாதவின் அப்பா லாலு பிரசாத் பாட்னா பல்கலை.யின் தலைவராகப்பட்டார். சுஷில் குமார் பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டார்.

நான் பொறியியல் கல்லூரியில் இருந்த போது அவரை (சுஷில் குமார்) வெற்றி பெற வைத்தேன். இவையெல்லாம் பழைய கதைகள். நாங்கள் இணைந்து இருந்த போது ஒன்றாக சேர்ந்து வேலை செய்தோம். தற்போது அவர் நீக்கப்பட்டு விட்டார். அவரை துணை முதல்வராக்க முடியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. அவர் இப்போது எதுவுமாகவும் இல்லை அதனால் ஏதாவது ஒன்றை சொல்லிக்கொண்டே இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT