உத்தரப் பிரதேசத்தில் போலீஸ்காரர்கள் உதவ மறுத்ததால் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக பலியாகினர். போலீஸ்காரர்கள் உதவ மறுத்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் சஹரான்பூரைச் சேர்ந்தவர்கள் அர்பித் குரானா மற்றும் சன்னி. இவர்கள் இருவரும் கடந்த வியாழக்கிழமை இரவு மோட்டார்பைக்கில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பத்தில் மோதி அருகிலிருந்த கால்வாயில் விழுந்துள்ளனர்.
இதனைப்பார்த்த அப்பகுதிவாசிகள் ஹெல்ப்லைன் எண் 100-ஐ தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்திருக்கின்றனர். உடனடியாக இரண்டு போலீஸ்காரர்கள், சம்பவ இடத்துக்கு காரில் வந்துள்ளனர்.
பொதுமக்கள் இளைஞர்கள் இருவரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கேட்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கு ஒரு போலீஸ்காரர் "இவர்களை காரில் ஏற்றிச் சென்றால் கார் முழுவதும் ரத்தமாகிவிடும் அப்புறம் நாங்கள் எப்படி அந்த காரில் இரவு முழுவதும் இருக்க முடியும். அவர்களை ஏதாவது ஆட்டோவில் ஏற்றிச் செல்லுங்கள்" எனக் கூறியுள்ளார்.
பொதுமக்கள் எவ்வளவு கெஞ்சியும் போலீஸ்காரர்கள் தங்கள் வாகனத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த இளைஞர்கள் ஏற்ற சம்மதிக்கவில்லை.
பின்னர், வேறுவழியில்லாமல் அந்த இளைஞர்களை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் இருவரும் தலைக்காயம் மற்றும் அதிக ரத்தப்போக்கால் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
தாமதிக்காமல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால் இளைஞர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என மக்கள் குமுறினர்.
விபத்து நடந்த இடத்தில் போலீஸ் - பொதுமக்கள் இடையேயான உரையடல் அனைத்தையும் யாரோ ஒருவர் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். இளைஞர்கள் இறந்துவிட்டதால் கோப ஆவேசத்தில் அதை அவர் சமூகவலைதளத்தில் வெளியிட அந்த வீடியோ தற்போது வைரலாகி உலா வருகிறது.
இதன் எதிரொலியாக இந்திரபால் சிங், பங்கஜ் குமார், மனோஜ் குமார் ஆகிய மூன்று போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.