இந்தியா

மோடியுடன் ரகசிய பேச்சுவார்த்தை கிடையாது: ட்விட்டரில் பவார் மறுப்பு

செய்திப்பிரிவு

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைப்பது குறித்து அக்கட்சி பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியை தான் ரகசியமாக சந்தித்ததாக எழுந்த குற்றச்சாட்டை சரத் பவார் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மராட்டிய நாளிதழ் ஒன்றின் முகப்புப் பக்கத்தில், தேர்தல் கூட்டணி குறித்து சரத் பவார் - நரேந்திர மோடி ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

"இந்த செய்தி தவறானது, அடிப்படை ஆதாரமற்றது, முழுக்க முழுக்க விஷமத்தனமானது" என சரத் பவார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும், மாநில முதல்வர்கள் மாநாட்டில் மட்டுமே வேறு மாநில முதல்வர்களை சந்தித்திருப்பதாகவும், இது தவிர வேறு எந்த தருணத்திலும் அவ்வாறான சந்திப்புகள் நடைபெற்றதில்லை என்றும் ட்விட்டரில் அவர் விளக்கமளித்துள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், தேசியவாத காங்கிரஸ் கட்சி முக்கிய அங்கம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT