இந்தியா

நினைவிடமாகும் எம்ஜிஆர் வளர்ந்த பாலக்காடு வீடு; சைதை துரைசாமி உதவுகிறார்

கே.ஏ.ஷாஜி

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் வளர்ந்த பாலக்காடு வீடு, சைதை துரைசாமியின் முயற்சியால் நினைவிடமாகிறது.

பாலக்காடு ஜில்லா, தத்தமங்கலம் புதுநகரத்திலிருந்து 5 கிலோ மீட்டரில் உள்ளது வடவனூர். இங்குதான் இருக்கிறது எம்ஜிஆர் வாழ்ந்த வீடு. இது சத்தியபாமாவின் பூர்வீக வீடு. வீட்டின் முகப்பிலுள்ள அறிவிப்புப் பலகை, 'கேரள சர்க்கார் சாமுகிய நிதி வருஷி. பிளாக் கொல்லங்கோடு, பஞ்சாயத்து வடவனூரு. ஸ்தலம் கவுண்டத்தரா' என மலையாளத்தில் பேசுகிறது.

இலங்கையின் கண்டியிலிருந்து கேரளம் வந்த எம்ஜிஆர் குடும்பம், அவரது தாயின் பரம்பரை வீடான இங்குதான் முதலில் குடியேறியது. இந்தச் சிறிய ஓட்டு வீட்டில்தான் எம்ஜிஆர் தனது சிறு வயதைக் கழித்தார். அதன் பிறகு அவர் சென்னையில் குடியேறினாலும் இந்த வீட்டை மறக்கவில்லை. தமிழக முதல்வராக வந்த பிறகுகூட அவ்வப்போது இங்கு வந்து போயிருக்கிறார்.

பின்னர், அந்த வீட்டை அதே ஊரைச் சேர்ந்த நாவிதர் ஒருவருக்கு இலவசமாக எம்ஜிஆர் வழங்கினார். பல வகையில் கைமாறிய வீடு, தற்போது அங்கன்வாடியாக செயல்பட்டு வருகிறது. ஆனால், தற்போது அது சேதமடைந்த நிலையில் உள்ளது. 70 ஆண்டுகள் பழமையான அந்த வீட்டை சீரமைக்கும் பணியை சைதை துரைசாமி தொடங்கியுள்ளார். அவரின் முயற்சிக்கு கிராம பஞ்சாயத்து ஆதரவளித்திருப்பதால், பழுதுபார்க்கும் பணிகள் கடந்த சனிக்கிழமை அன்று தொடங்கப்பட்டுள்ளன.

எழுச்சி பெறும் எம்ஜிஆர் வீடு

கரையான்கள் நிறைந்த, பழைய மரக்கூரைகள் வேயப்பட்ட கூரை தற்போது புதிதாக அமைக்கப்பட உள்ளது. சுவர்கள் பூசப்பட்டு, கூரையில் உள்ள ஓடுகள் மாற்றியமைக்கப்பட உள்ளன. இதனால் விரைவில் புதிய கான்க்ரீட் கட்டிடம் உருவாக உள்ளது. அத்துடன் சுற்றிலும் புதிய சுற்றுச்சுவரும் அமைக்கப்பட உள்ளது.

இத்துடன் அங்கேயே எம்ஜிஆரின் சிலை நிறுவப்படுகிறது. அருகிலேயே எம்ஜிஆர் குறித்த புத்தகங்கள், புகைப்படங்கள் அடங்கிய விளக்க மையமும் அமைக்கப்படுகிறது. கூடுதல் சிறப்பாக எம்ஜிஆர் குறித்த ஆவணப்படங்கள் மற்றும் அவர் நடித்த படங்கள் அனைத்தையும் திரையிட சிறு திரையரங்கும் உருவாக்கப்பட உள்ளது.

இதுகுறித்துப் பேசிய கிராம பஞ்சாயத்துத் துணைத் தலைவர் பி.ஏ.ராஜீவ், ''சைதை துரைசாமி அளித்துள்ள ரூ.10 லட்சம் பணத்தைக் கொண்டு ஒரு மாதத்தில் முதற்கட்டப் பணிகள் முடிவடையும். அங்கன்வாடி கட்டிடம், சிலை, விளக்க மையம் ஆகியவை இரண்டாவது கட்டமாக உருவாக்கப்படும். சமுதாயக் கூடத்துக்கு ஏற்கெனவே 'எம்ஜிஆர் நினைவு சமுதாயக் கூடம்' என்று பெயரிடப்பட்டுள்ளது'' என்றார்.

SCROLL FOR NEXT