கோப்புப்படம் 
இந்தியா

டெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்: தமிழகத்துக்கு 8,000 கன அடி நீர் திறப்பு

இரா.வினோத்

பெங்களூரு: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் காவிரியிலிருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழகத்துக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினரும் விவசாயசங்கத்தினரும் நேற்று மண்டியா, மைசூரு, பெங்களூரு ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக குடகு, மைசூரு, மண்டியா ஆகிய காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழைபெய்தது. இதனால் மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை 6 நிலவரப்படி 124 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 102.50 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 5 ஆயிரம் கன அடி நீர் வந்துக்கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 5 ஆயிரத்து 600 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

மைசூரு மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 2284 அடி உய‌ரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2277 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 1500 கன அடி நீர் வந்துக்கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து 2 ஆயிரத்து 500 கன அடி நீர் திறக்கப்ப‌ட்டுள்ளது.

கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது அதிக நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஒழுங்காற்று குழு கூட்டம்: காவிரி ஒழுங்காற்று குழுவின் 88-வது கூட்டம் அக்.12ம் தேதி நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த கூட்டம் காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவர் வினித் குப்தா தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் குழுவின் செயலாளர் டி.டி.ஷர்மா, உறுப்பினர் கோபால் ராய், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ள‌னர்.

கர்நாடக சட்டப்பேரவைத் தீர்மானம்: காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன் தினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு போட்டியாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற கர்நாடக அரசும் முடிவெடுள்ளது. இதுகுறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகையில், “கர்நாடகாவில் பருவமழை பொய்த்ததால் அணைகளில் நீர் இல்லை. இதனால் தமிழகத்துக்கு நீர் திறக்க முடியாத நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்ற இருக்கிறோம்'' என்றார்.

SCROLL FOR NEXT