சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் சட்டத்துக்குப் புறம்பாக கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் விவரத்தை பெற மத்திய அரசு முழுமுயற்சியில் இறங்கியுள்ளதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் தெரிவித்தார்.
அவையில் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:
சட்ட விதிகளை மீறி சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் கணக்கு தொடங்கி உள்ளவர்கள் விவரத்தை திரட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கணக்கு தொடங்கியவர் களுக்கு எதிராக போதிய ஆதாரங்களும் சேகரிக்கப்படும்.
சுவிஸ் நாட்டு அதிகாரிகளுடன் தகவல் பரிமாற்றம் தொடங்கப்பட்டுள்ளது. சுவிஸ் நாட்டின் சட்டத்துக்குட்பட்டு நமது நாட்டின் நலனுக்கு ஏற்றவகையில் ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்திடப்படும்.
சட்டத்துக்குப் புறம்பாக கணக்கு தொடங்கியுள்ளவர்களின் விவரம் கேட்டு இந்தியா கடிதம் எழுதியதையடுத்து சில சட்ட பிரச்சினைகளை சுவிஸ் அதிகாரிகள் எழுப்பியுள்ளனர். எனவே இவற்றை சமாளிக்க உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட உள்ளோம்,
சுவிட்சர்லாந்து -இந்தியா இடையேயான உடன்பாடு எதிர்காலத்தில் வங்கிக் கணக்கு தொடங்கக் கூடியவர்களின் விவரம் சம்பந்தப்பட்டது என்பதால் வங்கிக் கணக்கு தொடங்கியுள்ளவர்களின் முந்தைய பட்டியலை கொடுப்பதில் ஒத்துழைக்க சுவிஸ் தயங்குகிறது. எனினும் இந்தியா தமது முயற்சியை தொடர்கிறது.
சட்டத்துக்கு புறம்பாக சுவிஸ் வங்கிகளில் கணக்கு தொடங்கியுள்ளவர்கள் என 700 பேரின் பட்டியல் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இது பிரெஞ்சு அரசிடமிருந்து சில நிபந்தனைகளுடன் பெறப்பட்டது. இந்த விவரம் பிரான்ஸுக்கு எச்எஸ்பிசி வங்கி தகவல் மூலமாக கிடைத்ததாகும். அதில் உள்ளவர்கள் விவரத்தை வெளியிடக் கூடாது என்பது பிரான்ஸ் விதித்த நிபந்தனை.
லிக்டன்ஸ்டைன் வங்கியிலிருந்து முன்பு கிடைத்த பட்டியலை வைத்து கருப்புப்பணம் பதுக்கியுள்ள இந்தியர்களை கண்டறியும் நடவடிக்கை தொடங்கப்பட்டது.
அவ்வாறு அடையாளம் காணப்பட்டவர் கள் மீது வருமான வரி மற்றும் கிரிமினல் நடவடிக்கைகள் தொடங்கப்பட் டுள்ளன.
வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் என்றால் ரிசர்வ் வங்கி அனுமதி பெற வேண்டும். அப்படி அனுமதி பெறாமல் வங்கி கணக்கு தொடங்கி இருந்தால் அது சட்டத்துக்கு புறம்பானதாகும். அத்தகைய கணக்குகள் விவகாரத்தில் ஒத்துழைப்பு எதிர்பார்க்கிறோம். சம்பந்தப்பட்ட நாடு ஒத்துழைப்பு கொடுத்தால்தான் ஆதாரம் பெற முடியும் என்றார் ஜேட்லி.