காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஹமாஸ் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு ரம்ஜான் கொண்டாட்டங்கள் தடைபட்டன.
பிரிவினைவாத தலைவர்கள் மிர்வாய்ஸ் உமர் பரூக், சையத் அலி ஷா கிலானி, முகமது யாசின் மாலிக், பிலால் கனி லோன், அப்துல் கனி பட், ஷபிர் ஷா ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
இருப்பினும், ஹமாஸ் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் ஆதரவாளர்கள் ஸ்ரீநகரில் மோட்டார் சைக்கிளில் பேரணி மேற்கொண்டனர். அவர்களை தடுக்க வேண்டாம் என மேலிட உத்தரவு வந்திருந்ததால் பாதுகாப்புப் படையினரும், போலீசும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இருப்பினும், சிலர் வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, பேரணியை கட்டுப்படுத்த காவல்துறையினர் முயன்றனர். அப்போது, சிலர் போலீஸார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து போலீஸ் தடியடி நடத்தியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. கலவரம் காரணமாக காஷ்மீரில் ரம்ஜான் கொண்டாட்டங்கள் தடைபட்டன.
முன்னதாக அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா ஹஸ்ரத்பால் மசூதியில் தொழுகை செய்தார். சுமார் 70,000 பேர் அங்கு திரண்டு தொழுகை மேற்கொண்டனர். முதல்வர் வருகையை ஒட்டி அங்கு பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.