அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து விவிஐபிக்களுக்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக புதன்கிழமை ஹைதராபாத் ஆளுநர் மாளிகையில் ஆந்திர தெலங்கானா மாநிலங்களின் ஆளுநர் நரசிம்மனிடம் சாட்சியாக விசாரணை நடத்தப்பட்டது.
2005-ம் ஆண்டில் மத்திய அரசு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் ஹெலிகாப்டர் வாங்க ரூ. 3,500 கோடிக்கு இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணையை தொடங்கியது.
இது தொடர்பாக, விசாரணைக் குள்ளான மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் எம்.கே.நாராயணன், கோவா முன்னாள் ஆளுநர் பான்ச் ஆகியோர் ஏற்கெனவே தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர்.
இந்நிலையில், அப்போதைய மத்திய புலனாய்வுத்துறை தலைமை பொறுப்பாளராக பணியாற்றிய தற்போதைய ஆந்திர-தெலங்கானா ஆளுநர், நரசிம்மனிடம் புதன்கிழமை டில்லியில் இருந்து வந்திருந்த சிபிஐ அதிகாரிகள், சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர். அவரை ஒரு சாட்சியாக கொள்வதற்காக இந்த விசாரணை நடைபெற்றது.