இந்தியா

மத்திய பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது: நிதிஷ் குமார்

செய்திப்பிரிவு

மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜகவின் முதல் பட்ஜெட் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்று பிஹார் முன்னாள் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவருமான நிதிஷ் குமார் விமர்சித்துள்ளார்.

அவர் கூறியதாவது: “வளர்ச்சியில் பின்தங்கியுள்ள பிஹார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது பற்றியோ, சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்குவது பற்றியோ எந்தவிதமான அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. இது தொடர்பாக தேர்தலின்போது பிஹார் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை பாஜக அரசு மறந்துவிட்டது.

பாதுகாப்பு மற்றும் காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதை தவிர வேறு புதிய அம்சங்கள் ஏதும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. நாளந்தா பல்கலைக்கழகம், புத்த கயா தொடர்பாக நிதி உதவி அளிக்கும் திட்டம் ஏதும் அறிவிக்கப்படவில்லை. பிஹாருக்கு வேளாண்மை, தோட்டக்கலை துறை சார்ந்த பல்கலைக்கழகம் அறிவிக்கப்படவில்லை. அதிகாரத்துக்கு வந்ததும் சாமானியர்களை பாஜக அரசு மறந்துவிட்டது” என்றார் நிதிஷ் குமார்.

SCROLL FOR NEXT