யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் தனது அதிமேல் ஆடம்பர கார்களைப் பதிவு செய்யும் போது போலியான ஆவணங்களை காட்டியதாக கேரள நடிகர் பகத் பாசில் குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
அதாவது கேரளாவில் அதிக வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக பகத் பாசில் இந்நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழ நடிகர் கைது செய்யப்பட்டார்.
கிரைம் பிரிவு அதிகாரி எஸ்.ஸ்ரீஜித், எஸ்பி கே.வி.சந்தோஷ் குமார் ஆகியோர் நடிகர் பகத் பாசிலை 2 மணி நேரங்களுக்கும் மேலாக விசாரித்து ஜாமீனில் விடுவித்தனர்.
கிறிஸ்துமஸ் தினமான இன்று பகத் பாசில் குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு வந்தார். முன்னதாகவே நடிகர் முன் ஜாமீன் வாங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
விசாரணையில் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் தனக்கு இது குறித்த சட்டங்கள் தெரியாது என்றும் கூறியதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக இதே குற்றச்சாட்டில் நடிகரும் ராஜ்யசபா உறுப்பினருமான சுரேஷ் கோபியும் கைது செய்யப்பட்டார். ஜனவரி 5-ம் தேதியன்று இதையொத்த வழக்கு ஒன்றில் நடிகை அமலா பாலும் விசாரணைக்கு ஆஜராகிறார்.
வாகன வரி ஏய்ப்பு விவகாரத்தில் பெரிய பனிமலையின் ஒரு முகடு மட்டுமே இப்போது தெரிய வந்துள்ளது என்கிறார் விசாரணை அதிகாரி ஒருவர். இதே போல் வரி ஏய்ப்பு செய்த தொழிலதிபர்கள், பிரபலஸ்தர்களும் தற்போது விசாரணையாளர்கள் கண்காணிப்புக்குக் கீழ் வந்துள்ளனர்.
இவர்கள் மட்டுமல்ல வரி ஏய்ப்பு செய்ய உதவி புரியும் ஆட்டோமொபைல் ஏஜென்சிகளும் கண்காணிப்புக்கு வலையத்துள் உள்ளன. கொச்சியில் உள்ள ஒரு ஷோ-ரூம் மீது ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மோட்டார் வாகனத் துறை அந்த ஷோ-ரூமின் உரிமத்தை ரத்து செய்துள்ளது.
புதுச்சேரியில் தங்கள் ஆடம்பர விலை உயர்வு வாகனங்களை பதிவு செய்வதன் மூலம் கேரள மாநிலத்துக்கு ஏகப்பட்ட வருவாய் நஷ்டமாகிறது. 20 லட்சம் மற்றும் அதற்கு மேலான ரூபாய் விலையுள்ள வாகனங்களுக்கு கேரளாவில் 20% வரி உண்டு, இதனை தவிர்க்கவே மோசடி வேலைகளில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது.
பொதுவாக இத்தகைய குற்றங்கள் ஜாமீனில் வெளிவர முடியாதவை, குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை கிடைக்கும்.