இந்தியா

காலிஸ்தான் தொடர்பு | பஞ்சாப், ஹரியாணா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் 50 இடங்களில் என்ஐஏ சோதனை

செய்திப்பிரிவு

பஞ்சாப்: பஞ்சாப், ஹரியாணா, டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது. காலிஸ்தான் பிரிவினைவாத குழுக்களுடன் தொடர்புடைய இடங்களைக் குறிவைத்து இந்த சோதனை நடைபெறுவதாகத் தகவல்கள் வந்துள்ளன.

பஞ்சாபில் 30 இடங்கள், ராஜஸ்தானில் 13 இடங்களில், ஹரியாணாவில் 4, உத்தராகண்டில் ஓரிடம் மற்றும் டெல்லி, உத்தரப் பிரதேசத்தில் சில இடங்கள் என மொத்தம் 50 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை ஆரம்பித்து நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக என்ஐஏ வட்டாரத்தில், வெளிநாட்டில் உள்ள காலிஸ்தான் போன்ற பிரிவினைவாத ஆதரவுக் குழுக்கள் சில இந்தியாவில் சிலரை அடையாளம் கண்டு ஹவாலா மூலமாக பணப் பரிவர்த்தனை செய்து போதைப் பொருட்கள், ஆயுதங்கள் வாங்க இங்குள்ள சிலரை ஊக்குவிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன் நீட்சியாகவே இன்றைய சோதனை நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்(45) கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த ஜூன் 18-ம் தேதி கொல்லப்பட்டார். ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை தீவிரவாதி என கடந்த 2020-ம் ஆண்டிலேயே இந்தியா அறிவித்திருந்தது. இந்நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்திருக்கிறது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சில நாட்களுக்கு முன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேறுமாறு கனடா உத்தரவிட்டது.

இதற்குப் பதிலடி தரும் விதமாக டெல்லியில் உள்ள கனடா தூதரை நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டது. மேலும், கனடாவைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய விசா வழங்கப்படுவதை தற்காலிகமாக நிறுத்துவதாகவும் இந்திய அரசு அறிவித்தது. இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான இந்த மோதல் காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இருநாட்டு உறவு பாதிக்கப்பட்டுள்ளது

SCROLL FOR NEXT