இந்தியா

திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு

என்.மகேஷ்குமார்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சம் நேற்று காலை சக்கரஸ்நான நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது.

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 18-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. சுவாமிக்கு ஆந்திர அரசு சார்பில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிபட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்கினார். இரவு, பெரியசேஷ வாகன சேவையுடன் பிரம்மோற்சவ வாகன சேவைகளும் மிகவும் விமரிசையாக தொடங்கின. தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

தங்க தேரோட்டம், தேர் திருவிழா போன்றவற்றிலும் பக்தர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். குறிப்பாக பிரம்மோற்சவத்தின் 5-ம் நாள் இரவு கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பர் எழுந்தருளினார். இதில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

வாகன சேவைகளில் தமிழகம், புதுவை, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நடனக் கலைஞர்கள் கலந்துகொண்டு பிரம்மோற்சவ விழாவை சிறப்பித்தனர். வாகன சேவையில், யானை, குதிரை, காளை ஆகிய பரிவட்டங்கள் முன்னால் செல்ல, ஜீயர் சுவாமிகளின் குழு நாலாயிர திவ்ய பிரபந்தத்தை பாடியவாறு செல்ல, அவர்களின் பின்னால் நடனக் குழுவினரின் நடனங்கள் பக்தர்களை மிகவும் கவர்ந்தன.

சக்கர ஸ்நானம்: இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் 9-ம் நாளான நேற்று காலை கோயில் அருகில் உள்ள புஷ்கரத்துக்கு (குளம்) ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் மற்றும் சக்கரத்தாழ்வார் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டனர்.

பின்னர், வராக சுவாமி கோயில் அருகே குளத்தின் முன்பாக, உற்சவ மூர்த்திகளுக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறின.

இதைத்தொடர்ந்து, ஜீயர்கள், பிரதான அர்ச்சகர்கள், தேவஸ் தான முக்கிய அதிகாரிகள் முன்னிலையில், சக்கர ஸ்நான தீர்த்தவாரி மிகச் சிறப்பாக நடந்தது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். இதைத்தொடர்ந்து மாலை கோயிலில் பிரம்மோற்சவ கொடியிறக்க நிகழ்ச்சி ஆகம விதிகளின்படி நடைபெற்றது. இத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.

SCROLL FOR NEXT